– 55 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணம்
– ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்” இன்றைய தினம்(02) திறந்து வைக்கப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (02)வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் ஆலை இத்திட்டமானது 266 மில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- சிவில் யுத்தம் முடிந்துவிட்டது : இப்போது அபிவிருத்திக்கான யுத்தத்தை ஒற்றுமையாக ஆரம்பிப்போம்.
- அடுத்த 05 – 10 வருடங்களில் வடக்கு அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றப்படும்.
வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 – 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் திட்டம் மற்றும் ‘யாழ்.நதி’ மூலம் வடக்கின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வுகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் நிலையமானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நடத்தப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி வங்கி (AFD) ஆகியவற்றின் உதவியுடன் யாழ்ப்பாணம் -கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் (JKWSSP) ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மட்டத்தில் 2.5 மில்லியன் நீர் இணைப்புகள் காணப்படும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மேலும் 60,000 இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 300,000 மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும் 80,000 பேருக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உப்பு நீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைசாத்திடப்பட்டது. இதுவரை, இருபது உயரமான நீர் தொட்டிகள் அமைத்தல், 186 கி.மீ பரிமாற்ற குழாய்கள் மற்றும் 382 கி.மீ விநியோக குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
உப்புநீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் 2021 ஜனவரியில் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 266 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்க காணி வழங்கி மக்களுக்கு நன்றி. தாளையடி பகுதிக்கு தனியானதொரு கிராம சேவகர் பிரிவை நிறுவுமாறு மக்கள் கோரியுள்ளனர். அதனை செய்யுமாறு ஆளுநருக்கு பணிப்புரை விடுப்பேன். இந்த சுத்திகரிப்பு நிலையம் யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வை வழங்கும்.
எதிர்காலத்தில் வலவ கங்கை நீர்த்திட்டத்தையும் ஆரம்பிப்போம், அதனால் பூநகரிக்கு நீர் கிடைக்கும். அதேபோல் யாழ். நதி நீர் திட்டத்தை (River For Jaffna) ஆரம்பிப்போம். இந்த திட்டங்கள் வந்தால் யாழில் நீர் பிரச்சினை இருக்காது. வடமராட்சி செழிப்பான பிரதேசமாக மாறும்.
இந்த நீருக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால் சூரிய சக்தியைப் பயன்படுத்தி கட்டணத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த பகுதிக்கு நீர் வழங்கல் முறைகளை செயற்படுத்தி நவீன விவசாயத்தை செயற்படுத்துவோம். நீருக்கு கட்டணம் செலுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு லீட்டரிலும் உச்ச பயனை அடைய வேண்டும்.
‘யாழ் நதி’ திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம். சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும், பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.
அடுத்த 5 -10 வருடங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும். அதேநேரம் மத்திய அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது. மாகாண சபையினால் அதனை செய்ய முடியும். எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். வங்குரோத்து நிலையிலும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்கள், சீன எக்ஸிம் வங்கி, பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளோம். அதனால் வௌிநாட்டுக் கடன்கள் எமக்கு கிடைக்கும். ஜப்பான் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளது. மற்றைய நாடுகளுடனும் அந்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவோம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசிய போது எட்டப்பட்ட உடன்பாடுகளை கைசாத்திடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பால் உற்பத்திச் செயற்பாடுகளுக்காக அமுல், கார்கில்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசிக்கிறோம். தற்போது நாட்டுக்குள் பண புழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இதனை தக்க வைத்துக்கொள்ள செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வேளையில், யாழ்ப்பாணமும் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக மாறும்.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி. தோாட்டப் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் பணிகளையும் அவரோடு இணைந்து முன்னெடுப்போம். எதிர்காலத்தில் இவ்வாறான பல பணிகளை செய்யவுள்ளோம்”. என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான்
“குடிநீர் அடிப்படை உரிமையாகும். அதை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, செலவு அதிகமாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்த இந்த சவாலை ஏற்றுக்கொண்டோம். ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்ற போது வடக்கில் குடிநீர் விநியோகம் 4% ஆக காணப்பட்டது. இன்று முதல் இது 40% ஆக உயர்வடையும். இந்த திட்டத்திற்கு பல கிராமங்கள் காணிகளை கொடுக்க விரும்பவில்லை. இந்த காணியை வழங்கிய தாளையடி கிராம மக்களுக்கு நன்றி.” என்றார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
”தமிழ் மக்களுக்கு வளர்ச்சி தாகம், உரிமை தாகம், குடிநீர் தாகம் என பல தாகங்கள் உள்ளன. இந்த தாகங்களுக்கு ஜனாதிபதி தீர்வுகளை வழங்கி வருகின்றார். இன்று வடக்கு மக்களுக்கான குடிநீர் உரிமையை வழங்குவதற்காக வந்துள்ளார். இந்த மாகாண மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்
“வடமாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு உதவிய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டும். 2015 ஆம் ஆண்டில், அவர் பிரதமராக இருந்த காலத்தில், முழுத் திட்டத்தையும் சீரமைத்து, அதற்குத் தேவையான மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரெஞ்சு அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) கூடுதல் நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டம் மேலும் வலுவடைந்தது. இந்த ஒப்பந்தம் கடல் நீரில் உப்புநீக்கும் நிலையத்தின் செயல்பாட்டை எளிதாக்கிய அதேவேளை, அதன் நிர்மாணம் மற்றும் ஐந்தாண்டு செயல்பாட்டு திட்டம் உட்பட திட்டத்தின் கூடுதல் செலவுகளை ஈடுகட்டவும் உதவியது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத்திட்டத்தினூடாக 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதும், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் 80 ஆயிரம் பயனாளர்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் வட மாகாண ஆலுநர் சாள்ஸ் ஆகியோர்களாலௌ வெகு விரைவில் இச்செயற்திட்டத்தை நிறைவுசெய்து கையளித்தமைக்கான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
அதாவது இது சமவெளி பிரதேசமான யாழ்ப்பாணம், குடிநீர் விநியோகத்திற்காக நிலத்தடி நீரிலே பிரதானமாகத் தங்கியுள்ளது. எனினும், அதிகளவு நீர் இறைத்தல், விவசாய இரசாயனப் பாவனை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் குறித்த நிலத்தடி நீர் மாசுபடுகின்றது. தேசியமட்டத்திலான சராசரி நீர் வழங்கலின் உள்ளடக்குகையான 48% உடன் ஒப்பிடும் போது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் 5% ஆக உள்ளது. மேற்கூறிய உண்மைகளை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரினைச் சுத்திகரிக்கும் உப்புநீக்கும் ஆலை யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
தாளையடி கடல் நீரை உப்புநீக்கும் ஆலை செயற்திட்டத்தில், குறைந்த கடல் உப்புத்தன்மைக்காக தளையடியில் அமைந்துள்ள இந்த ஆலை, கடல்நீரில் இருந்து 100% பாதுகாப்பான குடிநீரைத் தயாரிப்பதற்காக மேம்பட்ட RO தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய உப்புநீக்கும் வசதியாக, இது இலத்திரனியல் செயற்பாடு, இரசாயனவியல் மற்றும் நிர்வாக முறைமைகளை ஒன்றிணைத்து, குடிநீர்த் தரத்தை வினைத்திறனுடன் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, தினசரி 24 மில்லியன் லீற்றர் குடிநீரை உற்பத்தி செய்கிறது.
இந்த உப்புநீக்கும் ஆலை நிர்மாணத்திற்கான செலவு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு ரூ. 160 ஆகும். அதே நேரத்தில் வழக்கமான நன்னீர் சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு 40 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதாணி சாகல ரட்நாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தாகியோ கொனிஷி அமைச்சின் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொது முகாமையாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், விசேட விருந்தினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.