இலங்கையில் நிலைபேற்றியலில் முன்னோடியான DFCC வங்கி, இரு முக்கியமான முன்னெடுப்புக்களுடன் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் உலக சமுத்திரங்கள் தினம் ஆகிய நிகழ்வுகளை அனுட்டித்துள்ளது. முதலாவதாக வைக்காலில் சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டமும், அடுத்ததாக நக்கிள்ஸ் மலைத் தொடரில் ரிவர்ஸ்டனில் வன வளர்ப்புச் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான முதலீடுகளில் முன்னோடியாகச் செயற்பட்டு, 1990 களின் ஆரம்பத்தில் சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் மீதான தனது பயணத்தை ஆரம்பித்த DFCC வங்கியின் நீண்ட கால அர்ப்பணிப்பை இம்முயற்சிகள் பிரதிபலிக்கின்றன. 2030 ஆம் ஆண்டளவில் “பசுமை நிதி வழங்கலுக்கான வங்கியாக” (The Bank for Green Finance) மாறவேண்டும் என்ற குறிக்கோளுடன், DFCC வங்கி தொடர்ந்தும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருவதுடன், பசுமை காலநிலை நிதிய அங்கீகாரத்தைப் (Green Climate Fund – GCF) பெற்ற இலங்கையின் முதல் நிறுவனமாக மாறியது.
வைக்கால் ஜின் ஓயா முகத்துவாரத்தில் சதுப்புநில மறுசீரமைப்புச் செயற்திட்டமானது, 2024 ஜுன் 7 அன்று முன்னெடுக்கப்பட்டது. கரையோர சூழல்தொகுதிகளைப் பாதுகாப்பதற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற “சமுத்திரங்களுக்கு வாழ்வளிப்போம்” (Life to Marine) என்ற DFCC வங்கியின் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமே இந்த முயற்சி. இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா, பிரதம மனிதவளங்கள் அதிகாரி பதும சுபசிங்க உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் பலர் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர். பல்வேறு கிளைகள் மற்றும் பணிப்பிரிவுகளிலிருந்தும் தன்னார்வத் தொண்டர்கள் பலரும் இந்நிகழ்வில் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றினர்.
DFCC வங்கின் பரந்தளவிலான நிலைபேற்றியல் இலக்குகளை நோக்கிய பல கூட்டாண்மைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு, சுற்றாடல் அமைச்சின் உயிர் பல்வகைமை செயலகம், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் சதுப்புநில மறுசீரமைப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கருக்குப்பனை கடற்படைப் பிரிவில் DFCC வங்கியின் நிதியுதவியுடன் சதுப்புநில தாவர நாற்றுமேடையில் வளர்க்கப்பட்ட பெருங்கண்டல் மற்றும் சிறுகண்டல் ஆகிய சதுப்புநில தாவர இனங்களை நாட்டுவதில் இச்செயற்திட்டம் கவனம் செலுத்தியது.
சதுப்புநில காடுகள் வழங்கும் சூழல்தொகுதியின் நெகிழ்திறனை மேம்படுத்துவதே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளதுடன், இலங்கையின் மிக நீண்ட கரையோரத்தில் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்துச் செல்லும் சூழல் சவால்களை கையாள்வதற்கு ‘இயற்கை அடிப்படையிலான தீர்வாக’ அவை தமது மதிப்பை வெளிக்காண்பிக்கின்றன. அங்குள்ள உள்ளூர் வாசிகளும் இம்முன்னெடுப்பில் ஈடுபட்டதுடன், வைக்கால் சூரியா உல்லாச விடுதி மற்றும் அதன் பணியாளர்களின் தாராளமான ஆதரவும் கிடைத்தது. சூழலைப் பாதுகாப்பதில் கூட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஜின் ஓயா முகத்துவார சதுப்புநிலங்களின் மறுசீரமைப்பு, உள்ளூர் சூழல்தொகுதியை வளப்படுத்தி, பல்வகைப்பட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடம் அளிக்கின்றது. இந்நிகழ்வின் போது உயிர் பல்வகைமை செயலகத்தின் கலாநிதி மனோஜ் பிரசன்ன (PhD, C.Env.P) அவர்கள், “ஜின் ஓயாவில் சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் வாழ்விட வளப்படுத்தல்” (Mangrove Restoration and Habitat Enrichment of the Gin Oya) என்ற விழிப்புணர்வு அமர்வுக்கு தலைமை வகித்ததுடன், சதுப்புநிலங்களின் சூழலியல் முக்கியத்துவம் குறித்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ‘சூழல் மற்றும் மேம்பாடு’ (Environment and Development) தொடர்பில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் அடங்கலாக, இந்நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கும் அறிவூட்டுவதற்கு உதவினார்.
இச்செயற்திட்டத்துடன் இணைந்ததாக, 2024 ஜுன் 8 அன்று நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் காடாக்க செயற்திட்டமொன்றையும் DFCC வங்கி முன்னெடுத்ததுடன், இலங்கை வன பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 100 பூர்வீக தாவரங்களை நாட்டியுள்ளது. DFCC வங்கியின் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பலரும் இச்செயற்திட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினர். சூழல்தொகுதியை வளப்படுத்தி, அங்குள்ள பூர்வீக இனங்களைப் பாதுகாத்து, மண்ணுக்கு உரமூட்டி, மண்ணரிப்பைத் தடுத்து, யுனெஸ்கோ உலக பாரம்பரியம் ‘இலங்கை மத்திய மலைநாடு’ என்பதன் அங்கமான, நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த நலன் மற்றும் நெகிழ்திறனுக்கு பங்களிப்பதே இந்த காடாக்க முயற்சியின் நோக்கம்.
பல்வகைப்பட்ட சூழல்தொகுதிகளுக்கு தாயகமான நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனம், 31 முலையூட்டிகள், 128 பறவைகள், 53 ஊர்வன, 20 ஈருடக வாழிகள், 15 மீன், 60 வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் 17 மெல்லுடலிகள் (பாலுண்ணிகள்) போன்ற உயிரினங்களின் முக்கியமான சரணாலயமாக உள்ளது. நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள 17 வகையான பறவையினங்கள் மற்றும் தாவர வகைகளில் 15% ஆகியன இலங்கைக்கே உரித்தான உள்ளூர் இனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த மறுசீரமைப்பு மற்றும் காடாக்க செயற்திட்டங்கள், இலங்கையின் தனித்துவமான நிலப்பரப்புக்கள் மற்றும் கடல் சூழல் தொகுதிகள் மற்றும் அவற்றின் இயற்கை உயிரியல் பல்வகைமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. SDG 13 (காலநிலை நடவடிக்கை), SDG 14 (தண்ணீருக்கு கீழ் வாழும் உயிரினங்கள்), மற்றும் SDG 15 (நிலத்தில் வாழும் உயிரினங்கள்) உள்ளிட்ட பல்வேறு ஐநா நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகளுடன் (SDG) ஒன்றியுள்ளன.
இம்முயற்சிகள் குறித்து DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “சூழல் நிலைபேற்றியல் மீதான எமது அர்ப்பணிப்பு, எமது நெறிமுறைகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், சமூக ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதுடன், அவை நீண்ட கால அடிப்படையிலான நேர்மறை மற்றும் அடுக்கடுக்கான பலாபலன்களைத் தோற்றுவிக்கின்றன. இந்த முயற்சிகளும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற எமது ஏனைய பல நிலைபேற்றியல் நிகழ்ச்சித்திட்டங்களும் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி, வரும் தலைமுறைகளுக்காக நிலைபேணத்தக்க எதிர்காலத்தை உறுதி செய்வதில் முக்கியத்துவம் வகிக்கின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் நேர்மறையான காலநிலை நடவடிக்கைகளை அடையப்பெறுவதில் அதிகார சபைகள் மற்றும் சமூகங்களுடனான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ மற்றும் Euromoney இன் ‘Market Leader and Best in Service in Cash Management 2022 and 2023’ உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.