அத்தியாவசிய வேலைகளைத் தவிர வேறு எதற்காகவும் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாமென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதற்ற நிலை ஏற்படும் என நிலவும் அச்ச நிலை நிலவி வருகின்ற நிலையில் அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை தொடருமானால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என தெரிவித்தார்.
சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.