Home » மத்திய கிழக்கில் பதற்ற நிலை தொடருமானால் முகங்கொடுக்க நடவடிக்கை

மத்திய கிழக்கில் பதற்ற நிலை தொடருமானால் முகங்கொடுக்க நடவடிக்கை

- ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகவும் சரியானது

by Rizwan Segu Mohideen
August 2, 2024 8:02 am 0 comment

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை தொடருமானால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால்தான் இலங்கை இன்னொரு வெனிசுலாவாக மாறாமல் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்தது என்றும், எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

ஒரு நாடு என்ற வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக சர்வதேச அளவில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு பெரிஸ் கிளப் உட்பட எமக்கு கடன் வழங்கியுள்ள நாடுகளின் ஆதரவைப் பெறுவது முதல் சவாலாக இருந்தது. அதன்போது, பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் கொண்ட நாடுகளை கையாள்வது மிகவும் கடினமான பணியாக மாறியது.

ஆனால் கடன் மறுசீரமைப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய வெளிநாடுகளின் ஆதரவைப் பெற முடிந்தது. அது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றி என்றே கூற வேண்டும். வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள அந்த அறிவைப் பயன்படுத்தி வெளிநாடுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து எம்மால் முன்னேற முடிந்தது.

கடந்த மாதத்தில் ஜப்பான், சிங்கப்பூர், ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்கான விஜயங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தன. அந்தப் பயணங்கள் நீண்டகால பிரச்சினைகள் பலவற்றை தீர்க்க உதவியது. குறிப்பாக ஜப்பானால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 13 திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்தது. சிங்கப்பூருடன் முதலீடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. புதிய தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து ருமேனியாவுடன் கலந்துரையாடப்பட்டது. போலாந்திற்கு இலங்கையில் தூதரகம் ஒன்று இல்லை என்பதால், அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்குடன் கூடிய தீர்மானங்களினால் எம்மால் இவை அனைத்தையும் செய்ய முடிந்தது என்றே கூற வேண்டும். அவர் தன்னை ஒரு தரப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளைக் கையாள தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.

சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பான உலகப் புகழ்பெற்ற சஞ்சிகையான foreignpolicy.com இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை நன்கு முகாமைத்துவம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இதன் ஊடாக எமது சரியான வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம் நாட்டிற்கு பெருமளவான வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கில் எதிர்பாராத பதற்ற சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய தயார் நிலையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று விசேட குழுக்களை நியமித்துள்ளார். ஒரு குழு நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும், மற்றொரு குழு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பொருளாதார நிலை குறித்தும் செயற்படுகிறது. இரண்டு குழுக்களையும் கண்காணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

2022 இல், இந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு காரணங்கள் அதற்கு பங்களித்தன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, எரிபொருள் விலை அதிகரித்தது. நிலக்கரி, கோதுமை மா போன்றவற்றின் விலைகளும் அதிகரித்தன. விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் நாடு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்களை கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான முன் ஆயத்தமாக ஜனாதிபதி இவ்வாறு குழுக்களை நியமிப்பது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும்.

அதற்கிணங்க, நாட்டில் வலுசக்தியை உறுதிப்படுத்துவதற்கும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் சர்வதேச நடவடிக்கைகளை ஒரு நாடு கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாடு வீழ்ச்சியடையும் வரை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

இலங்கை இன்னுமொரு வெனிசுலாவாக மாற இடமளிக்காமல், இரண்டு வருடங்களில், எமது நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்தது. எனவே, 2022 ஆம் ஆண்டு இந்நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அன்று நாம் எடுத்த தீர்மானம் குறித்து இன்று நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான சூழ்நிலையிலிருந்து ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளோம். ஆனால் இது இன்னும் முழுமை பெறவில்லை. ஒரு சிறிய அசைவு உங்களை மீண்டும் படுகுழியில் விழச் செய்யும். எதிர்க்கட்சிகள் நாட்டை வீழ்த்தி மீண்டும் நரகத்தில் தள்ள விரும்புகிறார்களா?

அல்லது நரகத்தில் இருந்து பாதுகாத்து மீட்டெடுப்பதா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் கொலையை அனுமதிக்க முடியாது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x