Sunday, October 13, 2024
Home » தலைவர் அஷ்ரஃப் அவர்களும் தவிசாளர் எச்.எம். பாரூக்கும்

தலைவர் அஷ்ரஃப் அவர்களும் தவிசாளர் எச்.எம். பாரூக்கும்

- சவால்களும் சாதனைகளும்

by Rizwan Segu Mohideen
August 1, 2024 3:07 pm 0 comment

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்களுடைய அரசியல் தலைமைத்துவப் பண்புகளை அவருடன் நெருங்கி நேசமாகப் பழகிய எச். எம். பாரூக் அவர்கள் மூலமாக அறிந்து கொள்கின்ற அதேவேளையில் பாரூக் அவர்கள் பற்றிய அரசியல் பின்புலங்களையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. பாரூக் 1972 இல் கலகெதர ஜப்பார் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களுடன் ஓர் அறிமுகம் இருந்துள்ளதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அஷ்ரஃப் மற்றும் கலாநிதி பதியுதீன் மஹ்மூத்துடைய அரசியல் கால சூழல்களில் இருந்து வரும் வரலாற்றுக் கதைகளை கேட்பதற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் எமது நாட்டு மக்களிடையே இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.

இது சேர் டி.பி. ஜாயா, சேர் ராசிக் பரீத், காலம் முதல் இன்று வரை இலங்கை வரலாற்றில் தடம் பதித்த பெரியார்களை தேடிப் படிக்கின்ற புதுமையான அறிவு சார் விடயமாக உள்ளது. அதிலும் அரசியல் சமூக விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது மிக அத்தியாவசியமானது. பாரூக் அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து வெளியே வெளிச்சத்திற்கு கொண்டு வரும் போது இவற்றை தெளிவாக கண்டு கொள்ளலாம்.

இலங்கையில் மிகவும் வீழ்ச்சி நிலையில் இருந்த முஸ்லிம்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக அப்பொழுது கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத், தம் சமூகத்தின் அவல நிலை அறிந்து அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் பிரசித்தி பெற்றன. இற்றைவரையிலும் பேசப்பட்டு வருகின்றன. இன்று பலராலும் சிலாகித்துப் பேசப்படும் அஷ்ரஃப் கூட கலாநிதி பதியுதீன் மஹ்மூத்துடைய அரசியல் சூழலில் இருந்து பலதைக் கற்றுக் கொண்டவர்தான். ஏ.சி. எஸ். ஹமீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம். எச். எம். அஷ்ரப் ஆகிய மூன்று தலைவர்களுக்கிடையே அரசியலில் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

அந்த வகையில் பாரூக்குடைய அரசியல் வாழ்க்கைப் பின்புலத்தில் அஷ்ரஃப் மற்றும் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோர்களுடன் பழகிய சூழலை ஆராய்ந்து பார்க்கும் பட்சத்தில் இலங்கை அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பெறும் வாய்ப்பினைக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடலாம்.

ஆனாலும், பெரிய அரசியல் தலைவர்களை ஆராய்ந்தால் தான் நிறைய விடயங்களை அறிந்து கொள்ளலாம் என்பது அல்ல. அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பெருந் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய இரண்டாந் தர நிலையிலுள்ள அரசியல் பிரமுகர்களை ஆய்வு செய்தாலே அதற்குப் பொருத்தமான அவர்களுடைய ஆளுமையின் அடையாளங்களை நிறையக் கண்டு கொள்ளலாம். உண்மையில் பாரூக் போன்ற இரண்டாம் நிலையிலுள்ள அரசியல் பிரமுகர்களை அடையாளப்படுத்துவதன் மூலம் பெரிய அரசியல் தலைவர்களின் ஆளுமையின் அடையாளங்களை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இன்று பாரூக்குடைய வரலாற்றுச் செய்திகள் உலக ஊடக அரங்கில் பேச ஆரம்பித்து விட்டன. இந்தப் போக்குடையவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களும் பேசப்பட வேண்டும். அதே நேரம் புதிய அரசியல் தலைமைத்துவங்கள், நமது அரசியல் கலாசார பண்பாட்டில், நமது மக்கள், நமது உரிமைகளில், நமது வாழ்வியலில், நமது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் போன்ற விடயங்களில் காத்திரமான தன்மையுடனும் செயற்பட பாரூக்குடைய வரலாறு பயன்படும்.

பாரூக் அவர்களின் அரசியல், சமூக, கல்வி வாழ்க்கைப் பயணம் ஏறத்தாள 50 வருட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தனை ஆண்டு கால அரசியல், சமூக, கல்வி பாரம்பரியம், அந்த அனுபவம், அந்தப் படிப்பினைகள், தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு அரசியல் சமூக, கல்வி தொடர்பான புரிதல்கள், நுட்பங்கள், அறிதல்கள் அவர் மத்தியில் இரத்தமும் சதையுமாகப் பரவியிருக்கின்றன. புதிதாக அந்த அரசியல் சமூகத் துறையில் நுழையும் போது அவர் சூனியத்திற்குள் இல்லை. அவரைச் சுற்றி அரசியல், சமூகம், கல்வி சார்ந்த விடயங்களுக்காக வழிகாட்டல்கள் நிரம்பியிருந்தன. அந்த அரசியல் சமூகப், கல்விப் பணிகளுக்குள் குதிப்பவர்கள் எவ்வாறோ இலகுவாக வழிகாட்டப்படுவர். அத்தகைய சூழல் அவருடைய சிறுபராயத்தில் அவரது ஊரிலே தந்தை வழியாக கிடைத்தன.

பாரூக்கின் அரசியல் பயண வரலாறு 50 ஆண்டு காலம் கொண்டது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தன் தந்தை சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டிய அனுபவத்திற்கும் இன்று பேசப்படும் பாரூக்கின் அரசியல் அனுபவ முயற்சிகளுக்கும் நிறையச் சம்மந்தம் உண்டு என்பதுதான் யதார்த்தம். பாரூக்கின் அரசியல் செயற்பாடுகள் 1986 களின் தொடக்க காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றன. பாரூக்கின் தந்தை 1958 களில் சமூக சமயப் பணிகளில் ஈடுபட்ட அனுபவ முயற்சிகளின் தாக்கங்களே பாரூக் அவர்களிடம் காண முடிகின்றது. ‘அவர் தந்தை சேர் ராசிப் பரீத் அவர்களை அழைத்து வந்து அக்குரணயில் மிகப் பிரமாண்டமான கூட்டத்தை நடத்திய சம்பவம் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமன்றி அதன் போது தலதா மாளிகையின் தியவதன நிலமே, மாவட்ட அதிபர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் சமுகமளித்த விடயத்தின் தாக்கம் இயல்பாகவே தோன்றியது. ஒரு அரசியல் செயற்பாட்டுத் துறையாகவே அல்லது தனித்துவமான சமூகச் செயற்பாட்டுத் துறையாகவே அவை வளர்த்தெடுக்கப்பட வில்லை. அரசியல் துறைக்கான உட்கட்டுமானங்கள் எதுவும் கட்டியமைக்கப்படவும் இல்லை. ஒரு சமூக அசைவியக்கமாகவும் அது முன்னெடுக்கப்பட வில்லை.

இந்நிலையில்தான் அஷ்ரஃபினதும் நட்பும் சூழலினதும் உந்துதலினால், இலங்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயமும் பலர் அரசியலில் மிகுந்த ஆர்வத்தோடு களமிறங்க வெளிக்கிட்டார்கள். அந்த அரசியல் துறை ஆர்வலர்களுக்குக் கைகொடுத்து ஊக்குவித்தவர் அல்லது தத்தெடுத்துக் கொண்டவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரஃப் ஆவர். அந்தச் சூழலில் அஷ்ரஃப்புக்கு பக்கபலமாகச் செயற்பட்டு பிரபல்யமாகத் திகழ்ந்தவர் அக்கட்சியின் தவிசாளர் எச். எம். பாரூக்கும் கூட. அவர் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

உங்கள் தந்தை பெரிய சமூக சமயப் பணிகளில் ஈடுபாட்டைக் கொண்டவர். அவர் பற்றி கூற முடியுமா?

எனது தந்தையின் பெயர் ஈ. எச். முஹமட். அவர் ரம்புக்கனை என்ற ஊரில் பிறந்து கல்ஹின்னையில் திருமணம் முடித்தவர். அடப்பேலாகெதர என்ற மிகவும் முக்கியமான பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். வியாபாரியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பெரிய சமூக சேவையாளராக மாறினார்.

1958 காலப்பகுதிகளில் அங்கும்புர என்ற இடத்தில் சிங்கள மக்கள் 95 விகிதம் வாழ்ந்த ஊரில் அவர் வியாபாரம் செய்தார். அப்பொழுது அங்கும்புர பள்ளியின் நிர்வாக சபைத் தலைவராக இருந்தார். கல்ஹின்னை, ரம்புக்கல, அங்கும்புர ஆகிய பகுதிகளிலுள்ள சிங்கள மக்களை ஒன்று சேர்த்து தேசிய மீலாத் தின விழாவை நடத்தினார். அந்த மீலாத் விழாவுக்குப் பிரதம அதிதியாக சேர் ராசிக் பரீத்தை அழைத்தார். அப்பொழுது சேர் ராசிக் பரீத் கெபினட் அமைச்சராக இருந்தார். அந்த நிகழ்வில் அந்தக் காலத்தில் இருந்து தனவந்தராகக் காணப்பட்ட மாத்தளை மீஸான் முஹிடீன் ஹாஜியாரும் கலந்து கொண்டார். மீஸான் முஹிடீன் ஹாஜியார் எனது தந்தையும் ஒன்று விட்ட சகோதரர்கள். இக் கூட்டத்திற்கு 1000 க்கும் மேற்பட்ட பெரு எண்ணிக்கையிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். இதில் விசேட அதிதியாக கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே, கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டனர். பெரும்பான்மையின மக்கள் வாழ்ந்த இடத்தில் இந்நாட்டின் முக்கியமான அமைச்சர், பிரமுகர்களை அழைத்து இன ஒருமைப்பாட்டுக்கான விழாவை எனது தந்தை நடத்தினார்,

இதில் விசேடமாக கல்ஹின்னையில் உள்ள எல்லா மக்களும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டார்கள். இந்த மீலாத் விழா கல்ஹின்னையை ஒற்றுமைப்படுத்தி விழா என்று இன்று விதந்து பேசுபவர்கள் உள்ளார்கள். எமது ஊரின் பிரபல்யமான தொழிலதிபரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை ஆலோசகர் சபை உறுப்பினருமான முஸ்லிம் சலாஹுதீன் அன்று நடைபெற்ற அந்த மீலாத் விழாவின் சிறப்புப் படங்கள் கல்ஹின்னையைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வீடுகளிலும் இருத்தல் வேண்டும் என்பார். அந்தவகையில் அந்த மீலாத் விழா ஊரின் ஒற்றுமைக்காக பறைசாற்றிய விழாவாகும். சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் விழா என்று இன்னும் நினைவுபடுத்துவோர்கள் உள்ளார்கள். இது எனது தந்தையின் சேவையைப் பெருமைப்படுத்துகிறது.

நீங்கள் கலாநிதி பதியுதீன் மஹ்மூத்துடன் நேசம் வைத்துப் பழகுவதற்கு முன்னர் அவருடைய தொடர்பு ஆரம்ப காலத்தில் எவ்வாறு ஏற்பட்டது என்று கூறுவீர்களா?

1972–1977 களில் நான் கலகெதர ஜப்பார் மஹா வித்தியாலத்தில் அதிபராக இருந்தேன். அங்கு ஐந்து வருடம் அதிபராகக் கடமையாற்றினேன். அப்பொழுது தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலதெகர ஜப்பார் மகா வித்தியாலத்தில் கல்வி கற்றார். அவர் நவோதய புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு ரோயல் கல்லூரியில் இணைந்து கொண்டார். ஹக்கீமுடைய தந்தையாரும், எனது மனைவி றஸீமாவின் தாயும் கூடப் பிறந்த சகோதரர்கள். இது ஒரு முக்கியமான விடயம். அங்கு அப்பாடசாலையின் மேம்பாட்டுக்காக உழைத்து வந்தேன்.

ஒரு தடவை பாடசாலையின் தேவையை நிறைவேற்றுவதற்காக கலகெதர தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தமரா குமாரி இலங்க ரத்தனவைச் சந்தித்தேன். ஒரு யுக்தியைக் கையாண்டு எனது பாடசாலைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பெற்றோர்கள் எல்லோரும் உங்களைச் சந்திக்க வருகை தருவார்கள் என்றேன். அவர் அப்பொழுது எதற்காக என்று வினவினார். ஏனென்றால் பாடசாலையின் தேவைகள் எவையும் நிறைவேற்றித் தராமல் இருப்பதால் அவற்றை முறைப்பாடு செய்வதற்காக வருவார்கள் என்றேன். அப்பொழுது அவர் உடனே அவர்களை வர வேண்டாம் என்று சொல்லுங்கள். நான் அதனைப் பார்த்துக் கொள்கின்றேன் என்றார். உடனே எனக்கு முன்னால், அன்று கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதன் போது அவர் ஜப்பார் மகா வித்தியாலத்தின் தேவையான விடயங்களை நிறைவேற்றிக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதன் பின்பு கலாநிதி பதியுதீன் மஹ்மூத்தை நேரில் சென்று சந்தித்தேன். அப்பொழுது அவர் இந்த தொலைபேசி அழைப்பு அவரிடமிருந்து வரும்வரை மட்டும் தான் நான் காத்திருந்தேன் என்றார்.

ஏனென்றால், அந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் சான்றுகள் இல்லாமல் தனக்கு எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்றார். அவர் உடனே 100X20 கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்தார். பாடசாலையில் மனையியல் விஞ்ஞானப் பிரிவுக்கான கட்டடத்தை வழங்கினார். மறுநாள் கல்வி அமைச்சின் செயலாளரை அனுப்பி வைத்தார். அவர் பாடசாலைக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொண்டு சென்றார். அதன் பிறகு இன்னும் பாடசாலை வேலைகளுக்கு பல இலட்சக் கணக்கான ரூபாக்களை ஒதுக்கீடு செய்து தந்தார். கலகெதரை மக்களின் மனதில் வாழும் ஓர் அதிபராக இன்னும் மதிக்கப்பட்டு வருகின்றேன்.

எப்படி ஒரு வேலையை பாடசாலை முன்னேற்றத்திற்கு கையாள வேண்டும் என்ற யுக்தியை இந்த செயற்பாடு அமையும் எனக் கருதுகின்றேன்.

தற்போது கண்டியில் அமைந்துள்ள பதியுதீன் மஹ்மூத் கல்லூரி அந்த இடத்தில் அமைந்து இருக்கவில்லை. அந்த இடத்தில் அமைந்திருந்தது தொழில் நுட்பக் கல்லூரியாகும். அப்பொழுது கண்டி லைன் பள்ளிவாசலுக்கு மேல் ஒரு சிறிய முஸ்லிம் பாடசாலை இருந்தது. அங்கு அருகிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளை ஒன்று சேர்த்து கண்டியில் ஒரு பெண்கள் பாடசாலை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. அந்த வகையில் தற்போது கல்விப் பணிமனையாக விளங்குகின்ற இடத்திற்கு மாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் லைன் பள்ளியில் இருந்த பாடசாலைப் பிள்ளைகளையும் ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்ற பிள்ளைகளையும் ஒன்று சேர்த்து பெண்கள் பாடசாலையை கண்டியில் ஆரம்பித்தார். இதற்கு வழக்கம் போன்று பாரிய எதிர்ப்புக்கள் எழுந்தன. அச்சந்தர்ப்பத்தில் அப்பாடசாலையைப் பார்வையிடுவதற்காகச் சென்றேன். அங்குள்ள பொருட்களை எல்லாம் ஏற்றிச் செல்வதையும் அங்கு பொருத்தியிருந்த மின் விசிறிகளையும் கலட்டுவதையும் அவதானித்தேன். இது தொடர்பில் உடனே கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்கு முறைப்பாடு தெரிவித்தேன். அவர் தொலைபேசியில் அறிவுறுத்தல் விடுத்திருந்தார். அதாவது ‘நான் இன்று 3.00 மணிக்கு வருவேன். அவ்வளவு பொருட்களும், மின்விசிறிகளும் இருந்திருந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார். எடுத்து சென்றதை மீளவும் கொண்டு வந்து வைத்ததும், மின்விசிறிகளை மீளப் பொருத்திய காட்சிகளை நான் கண்ணால் காணக் கூடியதாக இருந்தன. அதன் பிறகு அப்பாடசாலையின் வளர்ச்சிக்கான பல பங்களிப்புக்களை அவர் ஊடாகச் செய்துள்ளேன். அப்பாடசாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாக்கள் போன்ற பல நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

1970–1972 களில் மடவளை மதீனா பாடசாலையின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினேன். அதன் பின்னர்தான் கலகெதரைப் பாடசாலைக்கு அதிபராக நியமனம் செய்யப்பட்டு வந்தேன். என்னைப் பற்றி அறிந்து கொண்டதுடன் கலகெதரை கல்விப் பணிப்பாளர் எனக்கு அழைப்பு விடுத்தார். அங்கு சென்ற போது அவர் என்னை அதிபராக நியமனம் செய்யவுள்ளேன் என்றார். அப்பொழுது அதற்கு நான் எனக்கு 27 வயது என்றேன். அதற்குப் பணிப்பாளர் கூறுகையில் தகுதியான அதிபர் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தேன். பலர் உங்களுடைய தகுதியைப் பற்றியும் நன்கு ஈடுபாடுடையவர் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் இயலாது என்கிறீர்கள். அப்ப நான் என்ன செய்வது என்றார். இதன் பின்னர் கடமையைப் பொறுப்பேற்கின்றேன் என்றேன். அங்கு சென்று சிறிய குடிசையில் வாழ்ந்து கொண்டுதான் பாடசாலையை கட்டியெழுப்பினேன். அதில் எனது மனைவியின் தாயாரின் தந்தை தலைமையாசிரியராகக் கடமையாற்றிய அந்த இடத்தில்தான் நாங்கள் குடும்பத்தோடு வசித்தோம். அந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்காக இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தேன்.

அந்த வகையில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்வி மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட போது அவருடன் சேர்ந்து பழகிய காலத்தில் அவர் கல்வியின் மேலெழுச்சிக்காக ஆற்றிய மனத் திருப்தியையும், மன ஆற்றலையும் தரும் விடயங்களையும் அவர் வாயிலாகவும் நான் கற்றுக் கொள்ளக் கிடைத்தது என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். எனது எண்ணங்களில் கல்வி, சமூக உணர்வுகளும் மற்றவர்களின் தேவை எவையென அறிந்து உணர்ந்து செயல் வடிவம் பெறுவதற்கு இதன் ஆக்கபூர்வமான உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்துவதற்கும் ஆசான்களாக எனது தந்தை, அஷ்ரஃப், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோர் பின்புலமாக இருந்துள்ளார்கள் என்று கூறுவதில் அது மிகையல்ல.

முன்னோடி அரசியல்வாதிகளான விளங்கும் எம்.எச்.எம். அஷ்ரஃப், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் மற்றும் எனது தந்தையின் வழிகாட்டலுடன் தன் அரசியல், கல்வி, சமூகப் பணியை அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளேன்.

நேர்காணல்: இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x