இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 180ஆக அதிகரித்துள்ளது. தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திங்கள் இரவு வயநாடு மாவட்டம் மேப்பாடியை அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டன.
மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த
வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
நேற்றுவரை 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றுவரை சுமார் 180 சடலங்கள்
மீட்கப்பட்டிருக்கின்றன. பலத்த மழை தொடர்ந்து வருவதால் வீதிகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
எறுவழிஞ்சி என்னும் ஒரு ஆறு தன் வழமையான பாதையை பெரும் நிலச்சரிவால் தொலைத்து ஒரு கிராமத்துக்கு நடுவே இப்போது பெருவெள்ளமாய் பாய்ந்து ஓடுகிறது. அந்தக் கிராமமும் கிராமத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களும் என்னதான் ஆனார்கள் என்பது தெரியாதுள்ளது. ஒட்டுமொத்த கிராமங்களே நிலத்தில் புதையுண்டு போயுள்ளன. அப்பகுதியில் மரணஓலம் கேட்கின்றது.