பொலிஸ் நிர்வாகப் பிரிவு பிரதானியின் பணிகளை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (01) கூடிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், அவர் பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் குறித்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவியில் இருந்த நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பதவிக்கு ஒருவரை பெயரிடுமாறு கடந்த ஜூலை 18ஆம் திகதி கூடிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் ஜூலை 29ஆம் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொலிஸ் மாஅதிபரின் பதவியில் எவரும் நியமிக்கப்படாத நிலையிலும் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லலித் பத்திநாயக்க தற்போது மத்திய மாகாணங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகின்றார் என்பதோடு குறித்த பதவிக்கு மேலதிகமாக இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் இப்பதவியில் நியமிகப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் நிலையிலுள்ள சிரேஷ்ட அதிகாரி பட்டியலில் முன்னிலையின் அடிப்படையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் அடுத்த பொலிஸ் மா அதிபராக அல்லது பதில் பொலிஸ் மாஅதிபராக அவர் நியமிக்கப்படாலமென எதிர்பார்த்த நிலையில் தற்போது குறித்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.