– மற்றுமொரு இளம் போதைப் பொருள் வர்த்தகர் தலைமறைவு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் போதைப்பொருள் வியாபாரி நேற்று (31) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
22 வயதுடைய இந்த இளம் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி பல மாதங்களாக இப்பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு போதைப்பொருளை மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார்.
சம்பவதினத்தன்று அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு அங்கு சென்று சோதனையிட்டனர்.
இதன்போது போதைப்பொருள் வியாபாரியிடமிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், அதனை பாவிக்கக்கூடிய கண்ணாடி குவளை, டிஜிட்டல் தராசு அத்தோடு குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீனால் பொதி செய்யப்பட்ட
விலையுயர்ந்த ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், குறித்த சந்தேகநபரை கைது செய்ததை தொடர்ந்து, இப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பிரபல இளம் போதைப்பொருள் வியாபாரி தப்பியோடி உள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணை செய்தோடு, அவரை இன்றையதினம் (01) அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றும் இருப்பதாகவும், அதில் கல்வி கற்கும் மாணவர்களை மையப்படுத்தி அவர்களுக்கு இப்போதைப்பொருளை இவ்வியாபாரி விற்பனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக அக்கரைப்பற்று பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதன் பாவனைகளை இல்லாமல் செய்வதற்காக பல வழிகளிலும் அக்கரைப்பற்று பொலிஸார் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்ளியூ.எம்.எஸ்.பி. விஜயதுங்க வழிகாட்டலில், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திருமதி. சந்தியா குமாரி தலைமையிலான மானமடு PC , தாஹீர் PC , அனஸ் PC, செய்யத் மெளலானா PC, கஜன் PC, றிபாய் PC, ராகுலன் PC , ரூபினி WPC ஆகியோர் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்