ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் காசா போரை ஒட்டி பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னர் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஹமாஸ் அமைப்பு மற்றும் ஈரான் குற்றம்சாட்டும் நிலையில், ஈரான் மண்ணில் இடம்பெற்ற இந்தப் படுகொலைக்கு பழிதீர்க்கும் கடமை ஈரான் உடையது என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் அலி கமனெய் குறிப்பிட்டிருப்பதோடு ஈரான் மற்றும் அதன் கூட்டணிகளிடம் இருந்து இஸ்ரேல் கடுமையான மற்றும் வலிமிகுந்த பதில் ஒன்றை எதிர்கொள்ளும் என்று ஈரான் புரட்சிக் காவல் படை எச்சரித்துள்ளது.
இஸ்மாயில் ஹனியா
காசாவில் உள்ள அகதி முகாம் ஒன்றில் 1963 ஆம் ஆண்டு பிறந்த இஸ்மாயில் ஹனியா ஹமாஸ் அமைப்பின் ஆரம்பம் தொடக்கம் அதில் உறுப்பினராக இருந்தவர்.
இஸ்ரேலினால் பல முறை கைது செய்யப்பட்டிருக்கும் ஹனியே, ஒரு தடவை ஆறு மாதங்களுக்கு தெற்கு லெபனானுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார். 2003 இல் ஹமாஸ் நிறுவனருடன் படுகொலை முயற்சியில் உயிர் தப்பினார்.
மூன்று ஆண்டுகளின் பின் ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்ற பின் பலஸ்தீன பிரதமராக சிறிது காலம் இருந்தபோதும் ஹமாஸ் மற்றும் பத்தா உட்பட பலஸ்தீன தரப்புகள் இடையே மோதல் வெடித்தது.
ஒரு நடைமுறைவாதியாக பரவலாகக் கருதப்படும் ஹனியே, பலஸ்தீன போட்டிக் குழுக்களுடன் நல்ல உறவை பேணி வந்தார். 2017 இல் ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அண்மைய ஆண்டுகளில் அவர் காசாவில் இருந்து வெளியேறி துருக்கி மற்றும் கட்டாரிலேயே வசித்து வந்தார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அவர் முக்கிய பங்கு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனியே படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் காசாவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரையும் இஸ்ரேல் படுகொலை செய்தது. வடக்கு காசாவின் ஷட்டி அகதி முகாமில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் தனது குடும்பத்தின் 60 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அப்போது ஹனியே கூறி இருந்தார்.
கடந்த ஏப்ரலில் ஹனியேவின் மூன்று மகன்மார் சென்ற கார் வண்டி தாக்கப்பட்டதில் அவர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஹனியேவின் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஈரான் புதிய ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற ஹனியா, நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவர் தங்கியிருந்த கட்டடம் தாக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. இதன்போது அவரது மெய்க்காவலர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
‘இஸ்லாமிய போராட்ட அமைப்பான ஹமாஸ், எமது பலஸ்தீன மக்கள், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் உலகின் அனைத்து சுதந்திர மக்களுடன் இணைந்து டெஹ்ரானில் உள்ள தனது குடியிருப்பின் மீது சியோனிச தாக்குதல ஒன்றில் கொல்லப்பட்ட அமைப்பின் தலைவர் முஜாஹித் இஸ்மாயில் ஹனியாவின் உயிர்த் தியாகத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கிறது’ என்று ஹமாஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹனியாவின் படுகொலை தொடர்பில் ஈரான் தொடர்ந்தும் ஆய்வு நடத்தி வருவதாக லெபனானுக்கான ஈரான் தூதுவர் மொஜ்தபா அபானி நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து உடன் உறுதி செய்யப்படாதபோதும் இலக்கை நோக்கிச் செல்லும் வழிப்படு ஏவுகணை ஒன்றின் மூலம் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
டெஹ்ரானின் வடக்கில் உள்ள படை வீரர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் ஹனியா தங்கி இருந்ததாகவும் வானில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை ஒன்றினால் அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஈரான் புரட்சிக் காவல் படையுடன் தொடர்புபட்ட பார்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படுகொலை தொடர்பில் வழக்கம்போல் இஸ்ரேல் மௌனம் காத்து வரும் நிலையில், இது தொடர்பில் கருத்துக் கூற வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் தீவிர வலதுசாரியான மரபுரிமை அமைச்சர் அமிசாய் எலியாகு, ஹமாஸ் தலைவரின் மரணத்தை கொண்டாடும் வகையில் ‘எக்ஸ்’ சமூகதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ‘இந்தக் கொலை உலகை சற்று மேம்படுத்தி விடும்’ அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டார், ரஷ்யா, துருக்கி, சீனா உட்பட பால நாடுகளும் இந்தப் படுகொலையை கண்டித்துள்ளன.
இதனை ஒரு கோழைத்தனமான செயல் என்று சாடிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அபாயகரமான நிலையை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். ஹனியாவின் படுகொலை எதிர்ப்புப் போராளிகளின் ‘உறுதி மற்றும் பிடிவாதத்தை ஊக்கப்படுத்துவதோடு இஸ்ரேலுக்கு எதிராக போரிடுவதில் அவர்களின் தீர்மானத்தை வலுப்பெறச் செய்கிறது என்று லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படை வெளியிட்ட அறிவிப்பில், இந்தக் கொலை அபாயகரமான நிகழ்வு ஒன்று என்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலை பாதுகாப்போம்
பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின், இஸ்ரேல் தாக்கப்பட்டால் அமெரிக்கா அதனை பாதுகாக்க உதவும் என்று உறுதி அளித்தார்.
‘போர் ஒன்று ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். எப்போதுமே இராஜதந்திரத்திற்கு வழி மற்றும் வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்று பிலிப்பைன்ஸ் சென்றிருக்கும் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு நிலைமைக்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளம் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டபோதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். ‘எமக்குப் போர் தேவையில்லை, ஆனால் சாத்தியமான அனைத்துக்கும் நாம் தயாராகி வருகிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹனியாவின் மரணத்திற்காக ஈரானில் மூன்று நாள் துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குற்றவாளியும் பயங்கரவாதியுமான சியோனிஸ அரசு கடுமையான தண்டனையை எதிர்கொள்ளும்’ என்று குறிப்பிட்ட உயர்மட்டத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனி, ‘ஹமாஸ் தலைவரின் இரத்தத்திற்கு பழிதீர்ப்பது கடைமை என்று ஈரான் கருதுகிறது’ என்றார்.
ஹனியாவின் இறுதிச் சடங்கு இன்று (01) தெஹ்ரானில் இடம்பெறவுள்ளதோடு இதனை அடுத்து அவரது உடல் கட்டார் தலைநகர் டோஹாவுக்கு எடுத்தச் செல்லப்படவிருப்பதாக ஹமாஸ் அமைப்பு டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை டோஹாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவிருப்பதாகவும் அது கூறியது.
ஹனியாவின் படுகொலையை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நேற்று பொது வேலை நிறுத்தம் அனுஷ்டிக்கப்பட்டது. ‘இந்தச் செய்தி இடிமின்னல் போன்று இருக்கிறது, நம்பமுடியவில்லை’ என்று மத்திய காசா நகரின் குடியிருப்பாளரான 35 வயது வயில் குதை குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீனர்களின் இரத்தம் மலிவானது என்பதையே ஹனியாவின் படுகொலை காட்டுகிறது என்று ரமல்லாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியரான 45 வயதான ஹொசம் அப்தல் ரசாக் தெரிவித்துள்ளார்.
‘ஈரானில் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை, பலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும், எமது இரத்தம் மலிவானது என்பதையும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் எம்மை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு விற்றிருப்பதையும் நிரூபிப்பதாக உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் மேலும் 45 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் அதேநேரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் ஒன்றில் ஹிஸ்புல்லா முன்னணி தளபதி ஒருவரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி சில மணி நேரத்திலேயே ஹனியா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி புவாத் ஷுக்ர் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தில் அவர் இருந்ததை ஹிஸ்புல்லா உறுதி செய்தபோதும் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இஸ்ரேல் கட்டுப்பாட்டு கோலன் குன்றில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதல் ஒன்றில் 12 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இஸ்ரேலின் லெபனான் எல்லையில் பதற்றம் உச்சம் பெற்றுள்ளது.
இந்த ரொக்கெட் தாக்குதலின் பின்னணியில் புவாத் ஷுக்ர் இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. பெய்ரூட் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரு பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
‘எதிரி பொறுப்பற்ற மற்றும் பைத்தியக்காரத்தனமாக கொலைகார குற்றத்தை தொடர்ந்தால் நிலைமை கைமீறிப் போய்விடும்’ என்று லெபனான் பிரதமர் நயிப் மிகாத்தி நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எச்சரித்துள்ளார்.
299 ஆவது நாளாகவும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் தாக்குதல்களை நடத்தி இருந்தது. ரபா நகரின் மேற்கே அல் மவாசியில் வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டு மேலும் 77 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,445 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,073 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்மாயில் ஹனியா முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில் அவரது படுகொலை அந்தப் பேச்சுவார்த்தையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ரோமில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறக் கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர். எனினும் ஹனியாவின் படுகொலையை அடுத்து அதில் முன்னேற்ற காண்பது கடினமாகியுள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றுக்கான பலஸ்தீன பேச்சுவார்த்தை குழுவை இஸ்ரேல இலக்கு வைக்கும் நிலையில் அமைதிப் பேச்சுகளின் சாத்தியம் பற்றி கவலை எழுகிறது என்று கட்டார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் ஜசீம் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.