பாரிஸ் ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் இன்று (01) ஸ்டே டி பிரான்ஸ் அரங்கில் ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கையின் மூன்று வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் முக்கிய போட்டி நிகழ்வான தடகள போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் 48 போட்டி நிகழ்ச்சிகளில் மொத்தம் 1,810 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
தடகள போட்டிகளில் இலங்கை சார்பில் முதல் போட்டியில் மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன முதல் பேட்டியில் பங்கேற்கவுள்ளார். ஹான்சூவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தரூஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆரம்ப சுற்றில் நாளை (2) களமிறங்கவுள்ளார்.
தொடர்ந்து சர்வதேச ரீதியில் பதக்கம் வென்றிருக்கும் அருண தர்ஷன முதல் முறையாக எதிர்வரும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குகிறார். அவர் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கேற்கிறார்.
ஹான்சூ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டில்ஹானி லேகம்கே எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
தரூஷி, அருண மற்றும் டில்ஹானி ஆகியோர் தற்போது பாரிஸ் நகரில் தமது ஆரம்ப சுற்று போட்டிகளுக்கான பயிற்சிகள் மற்றும் தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தத்தமது போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவதை இலக்காகக் கொண்டே தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘தனிப்பட்ட போட்டித் திறமையை அடைவதே எமது இலக்காக உள்ளது. எம்மால் நிர்ணயிக்க முடியுமான சாத்தியமான இலக்காக அது உள்ளது’ என்று அருண தர்ஷனவின் பயிற்சியாளர் அசங்க ராஜகருணா பாரிஸ் நகரில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.
இதில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷயனவின் சிறந்த காலம் 45.45 ஆக இருப்பதாடு, இந்தப் போட்டியில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 48 வீரர்களில் 46 ஆவது வீரராகவே அவர் ஒலிம்பிக் தகுதியை பெற்றிருந்தார்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தரூஷியின் சிறந்த காலம் 2:00.66 நிமிடம் என்பதோடு பெண்களுக்கான ஈட்டி எறிதலில் லேகம்கே 61.57 மீற்றர் வீசியதே சிறந்ததாக உள்ளது.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் மூன்று மெய்வல்லுனர்களுடன் இலங்கை சார்பில் ஆறு பேர் பங்கேற்றுள்ளனர். எனினும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பூப்பந்து போட்டியில் பங்கேற்ற விரேன் நெத்தசிங்க மற்றும் நீச்சல் போட்டியில் பங்கேற்ற கைல் அபேசிங்க, கங்கா செனவிரத்ன ஆகியோர் ஆரம்ப சுற்றுடன் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.