அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை அவரது அனுமதியின்றி உபயோகித்துள்ள சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் விஷேட பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் லக்மால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமது பிரத்தியேக பணியாற்றொகுதியில் பணிபுரிந்த முன்னாள் ஊடகச் செயலாளர் மகேஷ் விக்கிரம என்பவரே, தமது அனுமதியின்றி இந்த கடன் அட்டையை உபயோகித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமது தனிப்பட்ட பணியாற்றொகுதியில் பணியாற்றிய முன்னாள் ஊடக செயலாளரை பல்வேறு முறைகேடுகள் காரணமாக சேவையிலிருந்து நீக்கியதாகவும் முறைப்பாட்டாளரான அமைச்சர் தெரிவித்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்