இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தில் திணைக்களங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றியவர்களுக்கு பதிலாக வேறு நிர்வாகிகள் குறித்த இடங்களை கையேற்கும் சம்பிரதாய நிகழ்வு பீடாதிபதி எம்.எச்.ஏ.முனாஸ் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது இரண்டரை வருடங்களாக அரபுமொழி துறையின் துறைத் தலைவியாக இருந்த எம்.சி.எஸ்.சாதிஃபா தனது உயர் கற்கையை தொடர்வதால் கலாநிதி ஏ.எம்.ராசிக் அரபுமொழி துறையில் துறை தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறே மூன்று தடவைகள் IDU ஒருங்கிணைப்பாளராக இருந்த கலாநிதி எப்.எச்.ஏ.ஷிப்லி தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதால் குறித்த வெற்றிடத்துக்கு எம்.எஸ்.ஏ. ரியாத் ரூலி நியமிக்கப்பட்டார். இப்பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவிப் பதிவாளராக கடமை ஆற்றுகின்ற எம்.எச்.நபார் இப்பீடத்தின் Acting உதவிப் பதிவாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய பீடாதிபதி முனாஸ், கடந்த காலத்தில் இந்த பணிகளை சிரமத்தோடு மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பாக கடந்தகால சேவையை பாராட்டுவதோடு மாத்திரமன்றி புதியவர்களுக்கான உத்வேகத்தை வழங்குவது இந்நிகழ்வில் பிரதான நோக்கமாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.
அம்பாறை மத்திய தினகரன் நிருபர்