பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 600 கமாண்டோக்கள், காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா மற்றும் முன்னாள் டி.ஜி.பி ஷேஸ் பால் வைத் ஆகியோர் கூறியுள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அம்ஜத் அயுப்மிர்சா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற குழு (எஸ்.எஸ்.ஜி) அதிகாரி அதில் ரெஹ்மானி, காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறார். எஸ்.எஸ்.ஜி பட்டாலியனின் 600 கமாண்டோக்கள் குப்வாரா உள்ளிட்ட பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர். உள்ளூர் ஜிகாதி குழுவினர், அவர்களுக்கு உதவுகின்றனர். பூஞ்ச், உரி, ரஜோரி ஆகிய பகுதிகளில் தலா 150 பேர், 3 குழுக்களாக பிரிந்து ஊடுருவி உள்ளனர்.
எஸ்.எஸ்.ஜி குழுவில் லெப்டினன்ட் காலினல் அந்தஸ்தில் உள்ள ஷாகித் சலீம் ஜன்ஜூவா, தற்போது காஷ்மீரில் ஊடுருவி உள்ளார். இவர், தாக்குதல் நடத்தும் திட்டங்களை தயாரித்து வருகிறார். இந்திய இராணுவத்தின் 15 கார்ப்ஸ் பிரிவினருடன் மோதுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது. காஷ்மீருக்குள் ஊடுருவ எஸ்.எஸ்.ஜி குழுவின் இரண்டு பட்டாலியன்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் சாமானிய மக்கள் போல் ஊடுருவி உள்ள இவர்கள், மக்களுடன் கலந்து மறைந்துள்ளனர். தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். அம்மாநில முன்னாள் டி.ஜி.பி ஷேஸ் பால் வைத்தும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து காஷ்மீரில், இந்திய இராணுவத்தினர் கிராமம், கிராமமாக தீவிரமாக கமாண்டோக்களை தேடி வருகின்றனர். இந்த பணியை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. தேடும் பணி குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய இராணுவ தளபதிக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.