Home » 2024 ஜனாதிபதித் தேர்தல்: 92 எம்.பிக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு!

2024 ஜனாதிபதித் தேர்தல்: 92 எம்.பிக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு!

- ஜனாதிபதியை சந்தித்து உறுதிப்படுத்தினர்

by Rizwan Segu Mohideen
July 30, 2024 7:04 pm 0 comment

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உறுதிப்படுத்தியுள்ள அவர்கள், ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்புடன் செயற்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மீண்டும் அராஜகமற்ற, வரிசை யுகம் இல்லாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே  என்றும் அதனால் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டுக்காக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.  

தாம் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய கட்சியை பற்றி சிந்திக்காமல் ஒரு சிலரது கோரிக்கைக்கு அமைவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துவிட்டு பொது ஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் கலந்துகொள்வதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் உட்பட கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானம் சரியானது என்பதை உறுதி செய்துள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.

நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்ட போது இரண்டு வருடங்களில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாடுபட்டதையும் அவர்கள் நினைவுபடுத்தினர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தான் தனியாக ஏற்கவில்லை எனவும், நாட்டை நேசித்த திறமையான குழுவினர் தன்னுடன் இணைந்துகொண்டனர் என்றும் தெரிவித்தார். 

அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றினர் என்றும், அந்த குழுவினராலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

நாட்டைக் கட்டியெழுப்ப தமக்கு ஆதரவளிக்குமாறு தான் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அன்றுஎடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்களான அலி சப்ரி, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, அனுர பிரியதர்சன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, டி.பி. ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜானக வக்கும்புர, ஜோன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, மதுர விதானகே, ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் இங்கு கருத்து தெரிவித்தனர். 

பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.பிக்களுக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி பேஸ்புக் பதிவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x