Friday, October 4, 2024
Home » நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பர்

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பர்

by Rizwan Segu Mohideen
July 30, 2024 5:42 pm 0 comment

அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் இக்கட்டான காலங்களில் உறுவாவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், கடந்தகாலத்தில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் வலுவான தலைமைத்துவத்தின் பண்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க,

“2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்துடன் மக்களுக்காக முன் வந்தார்.

அதன்போது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதப் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொருளாதாரப் போரிலிருந்து காப்பாற்றினார்.

எனவே இத்தருணத்தில் அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்கும் எவரும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பார்கள். அதன்படி இம்முறை மாத்தளை மக்களின் ஆசியுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது ஆதரவை வழங்கி எனது கடமையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் உருவாகிய கட்சி என்பதைக் கூற வேண்டும். நான் மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுகின்றேன். மக்கள் என்னுடன் இருக்கும் வரை நான் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன். இல்லாவிட்டால் வீட்டுக்குச் செல்வேன்.

உலகின் கடினமான காலங்களில் சக்திவாய்ந்த தலைவர்கள் உறுவாகிறார்கள். கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலுவான தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தினார். அவருடைய சரியான பொருளாதார முகாமைத்துவக் கொள்கையால்தான் இன்று நமது நாடு இந்த இடத்தை அடைந்துள்ளது.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், பின்னர் நடைபெற்ற பிரித்தானியப் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். போரின் போது நாட்டைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்திய கிளமென்ட் அட்லி அங்கு வெற்றி பெற்று பிரதமரானார். சரித்திரம் மீண்டும் எழுதப்படுவது போன்று இலங்கையிலும் நடைபெறுகிறது என்பதைக் கூற வேண்டும்.

மேலும் விளையாட்டுத் துறை தொடர்பில் குறிப்பிட வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் தற்போதைய அரசாங்கம் இலங்கையின் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பணிகளை செய்துள்ளது. விளையாட்டுக்காக ஒம்புட்ஸ்மன் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து சென்றிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள இரண்டு ஹொக்கி மைதானங்களும் புனரமைக்கப்பட்டு அடுத்த மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முழுமையான விளையாட்டுத்துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்த ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x