– தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 முடிவுகள்
உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 13 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ரமழான் மற்றும் நத்தார் கொண்டாட்டக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காகவும், மற்றும் கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிப்பதற்குத் தேவையான முட்டைத் தொகையை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தால் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 95% வீதமானவை லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் மூலம் 37 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விநியோகித்துள்ளதுடன், முட்டை இறக்குமதிக்காக வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி 2024.04.30 ஆம் திகதியுடன் முடிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
2. களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தை இயங்கு நிலைக்கு கொண்டு வரல்
களனி வித்யாலங்கார பிரிவெனா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம், கடந்த காலங்களில் நிலவிய வெளியகக் காரணிகளால் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு இயங்கு நிலைக்கு கொண்டுவர முடியாது போயுள்ளது. அதனால்,குறித்த மாநாட்டு மண்டபத்தின் கட்டிடத்தை இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியொதுக்கீட்டை 2025 ஆம் ஆண்டில் பெற்றுக் கொள்வதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கரவ பிரதமரும், புத்தசாசன,சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
3. சீதுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதி
1000 மில்லியன் ரூபாய்கள் அடிப்படைச் செலவு மதிப்ப்பீட்டில் சீதுவ பிரதேசத்தில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக 2016.07.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கட்டுமானத்துக்கான ஒப்பந்தம் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், கட்டுமான பணிகள் 2020 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை நிலவிய நெருக்கடி நிலைமைகளால், குறித்த ஒப்பந்தத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டபொருட்களின் விலை அதிகரிப்புக் காரணமாக அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தால் கட்டுமானங்களின் செலவுக்குரிய விலை விலகல்கள் கோரப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு குறித்த விலைமாற்றத்தின் பெறுமதியான 63.68 மில்லியன் ரூபாய்களைச் செலுத்துவதற்காக மகளிர்,சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
4. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேயிலை விற்பனைக் கடைகளை நடாத்திச் செல்வதற்கான பெறுகை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் வருகைக்காக பயணிகள் காத்திருக்கின்ற பிரதேசத்தில் தேயிலை விற்பனை செய்வதற்கான ஐந்து விற்பனை நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றன. குறித்த விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்வதற்கான தேசிய போட்டி விலைமனுச் செயன்முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக எட்டு விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அதற்கமைய, தொழில்நுட்பமதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்காணும் கம்பனிகளுக்கு குறித்த ஒப்பந்தங்களை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• Euro – Scan Exports (Pvt) Limited
• English Tea Shop (UK) Limited
• Sunshine Consumer Lanka Limited
• U H E Exports (Pvt) Limited
• Ceylon Royal Teas (Pvt) Limited
5. நன் அயனிக் கன்ட்ராஸ்ட் மீடியா (Non Ionic Contrast Media) விநியோகிப்பதற்கான பெறுகை
CT மற்றும் X கதிரியக்கப்பட முறைமைக்காக பயன்படுத்தப்படும் Ionic Contrast Media கொள்வனவு செய்வதற்கான சர்வதேச போட்டி விலைமனு முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 06 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க,தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் பிரகாரம், விபரங்களுடன் கூடிய பதிலளிப்புகளை வழங்கியுள்ள குறைந்த விலைமனுதாரரானயுனிக் ஃபாமசூட்டிக்கல்ஸ் லபோட்டறீஸ் இற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. டேன் (TAN) இம்ப்ளான்ட்ஸ் உடன் கூடிய டிஸ்டல் ஃபிமோரல் நேலின் தொகுதிகள் 45 இனை விநியோகிப்பதற்கான பெறுகை
மோசமான என்பு முறிவுகளின் போது என்புகளைச் சுகப்படுத்தல் மற்றும் நேர்த்திப்படுத்தலுக்கு மேற்கொள்ளப்படுகின்ற என்பு முறிவு சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற டேன் (TAN) இம்ப்ளான்ட்ஸ் உடன் கூடிய டிஸ்டல் ஃபிமோரல் நேலின் தொகுதிகள் 45 இன் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக,அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம், விபரங்களும் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமுறிதாரரான இந்தியாவின் M/s Medisurge Internatiional இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. (393 ஆம் அத்தியாயம்) 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரணை செய்வதற்காக முற்கூட்டியே நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு மற்றும் குழுக்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து நடைமுறையிலுள்ள சட்டங்களின் பிரகாரம் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விதம் பற்றியும், சமகால அரசின் கொள்கைகளுக்கமைய தொடர்ந்தும் குறித்த விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள் தொடர்பான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக (393 ஆம் அத்தியாயம்) 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டீ. நவாஸ் அவர்களின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.09.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. இலங்கை உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலம்
சட்டவரைஞரால் வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பாக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த சட்டமூலத்தைத் திருத்தம் செய்து புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அவர்களின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும்,நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
கொழும்பு துறைமுக நகரத்தில் வணிகங்களில் ஈடுபடுவதற்கு எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக தற்போதுள்ள தடைகளை அகற்றி, உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையான பொருளாதார வலயமாக கொழும்புத் துறைமுக நகரத்தின் ஆற்றல்வளத்தை அதிகரிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில் கொழும்புத் துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.அதற்கமைய, குறித்த திருத்தங்களை உட்சேர்த்து 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இலங்கை கிரிக்கெட்டிற்கான புதிய யாப்பை சட்டமாக்குதல்
இலங்கை கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கெட்டிற்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த குழுவால் இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உத்தேச இலங்கை கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இந்திய அரசின் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்
இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, 2019.06.04 அன்று இடம்பெற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களால், குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அரச – தனியார் பங்குடமை தேசிய முகராண்மைக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
அரச – தனியார் பங்குடமை தேசிய முகராண்மை நிறுவனத்தால் அரச – தனியார் பங்குடமை வேலைத்திட்டங்கள்/ கருத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் முகாமைத்துவம் பற்றிய சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்கும், அவ்வாறான வேலைத்திட்டங்களை அடையாளங்கண்டு அரச நிறுவனங்களுடன் இணைந்து, குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த முகவராண்மை நிறுவனத்தை மிகவும் வினைத்திறனாகப் பேணிச் செல்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியதுடன், குறித்த பங்குடமை ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் சட்டரீதியான வேலைச்சட்டகத்தைத் தயாரித்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது.
அதற்கமைய, அப்பணிகளுக்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.