– யானைகளின் சனத்தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர்களில் 40% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,
கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024ல், வனவளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இவற்றில், 2022 ஆம் ஆண்டில் அந்த இடங்களுக்குச் சென்ற மொத்த சுற்றுலாப் பயணிகளில் 19.8% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாவர். 2023 ஆம் ஆண்டில், 27.8% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததோடு 2024 இல் 40% வீதமானோர் வருகை தந்துள்ளனர்.
இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகளை தயாரித்து,பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று, அதற்கான சட்டத் திருத்தங்களைச் தயாரித்து வருகிறோம்.அதன்படி, 2023 ஆம் ஆண்டில், 2500 ஹெக்டெயார் நிலப்பரப்பு கொண்ட கல்லோயா சுற்றுச்சூழல் பூங்கா புதிய சுற்றுலாத்தளமாக பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டது. மேலும், தற்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள குடவா தொரண எல்ல நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகளுக்காக தகவல் மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில், நக்கிள்ஸ் சுற்றுலா வனப்பகுதியின் இழுக்கும்புர பகுதியில் மாணிகல வன விடுதி கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கண்டி உடவத்தகெலேயில் சுற்றுலாப் பயணிகளுக்காக சைக்கிள் பாதை திறக்கப்பட்டது. பண்டாரவளை எல்ல வன இல்லம், புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்வில சுற்றுச்சூழல் பூங்கா போன்றவற்றையும் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்க முடிந்தது.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் மலசலகூட வசதி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் சிங்கராஜா, கன்னெலிய, ஹுருலு, நக்கிள்ஸ், உடவத்தகெலே ஆகிய இடங்களில் வெளிநாட்டு பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தனியான மலசல கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சுற்றுலா தலத்தை பார்வையிட ஒன்லைன் முறை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் தற்போது நடைமுறையில் உள்ளது.
மேலும், தற்போது 29% ஆக உள்ள வனவள பரப்பை 2030ஆம் ஆண்டுக்குள் 32% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எங்களின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்படாத சுமார் 144 000 ஹெக்டயார்களை புதிதாக காடுகளாக உள்வாங்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், காடுகளுக்கு அப்பால் மரங்களை நடுவதன் மூலம் மக்களுக்கு பலன்களை வழங்கும் நோக்கில், வன மீள்நடுகை மற்றும் விருட்சப் பாதுகாப்புச் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதோடு தற்பொழுது சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது.
மேலும், காடுகளை பாதுகாப்பதற்காக, இந்த ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்காத காடுகளைப் பாதுகாக்க, ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை கையாண்டு வருகிறோம். வன எல்லைகள் அடையாளம் காணப்பட்டு, நிரந்தர வன அமைப்பை நிறுவுவதற்காக அவற்றின் எல்லைகளைச் சுற்றி எல்லைத் தூண்கள் நடப்படுகின்றன.
மேலும் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அதற்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச ரீதியிலும் பாராட்டைப் பெற்றுள்ளன. கடந்த 02 ஆண்டுகளில், 326 ஹெக்டெயார் சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட விருதை இலங்கை வென்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் எமது அமைச்சின் கீழுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களமும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது . சில வருடங்களில் வருமானம் வீழ்ச்சியடைந்த போதிலும், 2023 ஆம் ஆண்டில் 1089.97 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 436.71 மில்லியன் ரூபாவாக இருந்த வருமானம் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 728.60 மில்லியன் ரூபவாக அதிகரித்துள்ளது.இது கடந்த ஆண்டை விட 66% முன்னேற்றம் என்றே கூற வேண்டும்.
அத்துடன், 2024ஆம் ஆண்டு இதுவரை அரச மரக் கூட்டுத்தாபனம்2000 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.இந்த வருட இறுதியில் அதிக இலாபத்தைப் பதிவு செய்யும் என்பது உறுதி.
மேலும், நம் நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ள யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், 2023ஆம் ஆண்டு முதல் மனித மற்றும் காட்டு யானைகளின் உயிரிழப்பைக் குறைக்க முடியும். தற்போது அமைக்கப்பட்டுள்ள 5390 கிலோமீற்றர் மின்வேலிகளை பராமரிக்க நான்காயிரத்து எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், 13 வருடங்களின் பின்னர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டில் யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், வனவிலங்கு குற்றங்களை தடுக்கும் வகையில், தாவரங்கள் மற்றும் விருட்சங்கள் சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார, வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.பி.என். எதிரிசிங்க, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்கள பணிப்பாளர் எச்.ஏ. அனோமா பிரியதர்ஷனி, அரச மரக் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) டபிள்யூ. பி.சமந்த உட்பட வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.