ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“சிலோன் டீ” உலகின் முன்னணி வர்த்தக நாமமாகத் திகழ்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, புதிய மூலோபாய வேலைத்திட்டத்தின் ஊடாக அதனை மேலும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (25) ஆரம்பமான “கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்” ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கமும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து “தேயிலை – ஒரு வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம்” என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் அது தொடர்பான வர்த்தகங்களின் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, கென்யா, சீனா, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள், முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன.
நம்நாட்டு தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ள பல வர்த்தகங்களின் கண்காட்சிகளும் இதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு தேயிலை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஹேரதினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், கொழும்பு சர்வதேச தேயிலை சம்மேளனத்தின் இணைத் தலைவர்களான கணேஷ் தேவநாயகம் மற்றும் அனில் குக் உள்ளிட்ட தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தேயிலை கைத்தொழில் சம்பந்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.