உமாஓயாவிலிருந்து பெலவத்தைவரை தேசிய நீர்ப்பாசன திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6,000 மெற்றிக்தொன் சீனி மற்றும் 877,500 லீற்றர் எதனோல் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உமாஓயாவிலிருந்து பெலவத்தைவரையான தேசிய நீர்ப்பாசன திட்டம் புத்தல பெலவத்தை பத்து குடியிருப்பு பகுதியிலுள்ள அக்கரே தெகே குளத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் உமாஓயா திட்டத்தின் மூலம் திறந்து விடப்படும் நீரின் ஒருபகுதி கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு அக்கரே தெகே குளத்துக்கு விநியோகிக்கப்பட்டது.
இதனால் புத்தல குடியேற்றத்தின் எட்டு கிராமங்களிலுள்ள ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டு ஆண்டுக்கு 6,000 மெற்றிக்தொன் சீனி மற்றும் 877,500 லீற்றர் எதனோல் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் மேலதிக வருமானம் 6 இலட்சம் ரூபாவாக அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார, பெலவத்தை சீனி நிறுவன அதிகாரிகள், கரும்பு செய்கையாளர்கள், பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊவா சுழற்சி நிருபர்