– எரிபொருள் விலை குறைப்பின் நன்மை பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை
– வேலைநிறுத்தங்களின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட புகையிரத சேவை
– 27/2023 சுற்றறிக்கு அமைய நடவடிக்கை எடுப்பது அதிகாரிகள் பொறுப்பு
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்காக தேர்தல் தொடர்பான 320 சொற்களைக் கொண்ட புதிய சைகை மொழி சொற்களஞ்சியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இயலாமையுடைய சமூகத்தின் செயல்பாடுகளுக்கு அணுகல் வசதிகள் உள்ளிட்ட அதிகபட்ச வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (11) ஆம் திகதி கூடியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடகாலத்தில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும், 27/2023 அரச நிர்வாக சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பதும் சகல அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமத்திராரச்சி தெரிவித்தார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, மேல் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். குழுவின் தலையீட்டின் மூலம் வெளியிடப்பட்ட 27/2023 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமையை அரசாங்க நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2023ஆம் ஆண்டின் செயலாற்று அறிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேர்தல்களின் போது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் விரல்களில் வர்ணம் பூசுவது அனாவசியமானது என்ற குழுவின் முன்னைய அறிவுறுத்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய விரல்களில் பூசப்படும் வர்ணங்களை இறக்குமதி செய்வதை இரத்துச் செய்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனை இந்தச் சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்தாதிருக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். கைவிரல்களில் வர்ணம் பூசும் செயற்பாட்டை நீக்கினால் அதிக பணம், நேரம் மற்றும் உழைப்பு மீதப்படுத்தப்படும் என்பது இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்படி, தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளையும் குழுவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் இயலாமையுடைய நபர்களுக்காக மேலும் பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்காக தேர்தல் தொடர்பான 320 சொற்களைக் கொண்ட புதிய சைகை மொழி சொற்களஞ்சியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இயலாமையுடைய சமூகத்தின் செயல்பாடுகளுக்கு அணுகல் வசதிகள் உள்ளிட்ட அதிகபட்ச வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க சேவை குறித்து சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சு மட்டத்தில் தனியான அதிகாரிகளை நியமித்து விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தும் அரசாங்க நிறுவனங்களைப் பாராட்டுவதாகவும் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமத்திராரச்சி தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பில் அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பதிவாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து ஓய்வூதியம் செலுத்தும் போது உயிரிழக்கும் நபர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. வாழ்க்கைச் சான்றிதழைப் பெறுவதில் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதுடன், மேலும் வெளிப்படைத் தன்மையுடன் பணியை மேற்கொள்வதற்கான திறனை உறுதிப்படுத்துவதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
எரிபொருள் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கான நியாயமான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரத்தைத் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
ரயில்வே பணிப்புறக்கணிப்பின் போது சில விசேட ரயில்களை இயக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, மொஹமட் முஸம்மில், ரோஹன பண்டார, ஜயந்த வீரசிங்க, மர்ஜான் ஃபலீல், டபிள்யூ.எச்.எம். தர்மசேன ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.