1846ஆம் ஆண்டில் சங்கர ஐயர் கதிர்காம ஐயர் அவர்களால் ஆயக்கடவை சித்தி விநாயகருக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு 1927 இல் சேர் பொன் இராமநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிஎழுப்பப்பட்ட புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இவ்வாரம்- யூலை 17ஆம் திகதி திறன்வகுப்பறை செயற்பாடுகள் இப்பாடசாலை சமூகத்தினரின் முன்னிலையில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரட்னம் பவுண்டேசன் ஸ்தாபகர் வைத்திய கலாநிதி இரட்னம் நித்தியானந்தம் வழிகாட்டலில் லண்டனைச் சேர்ந்த பாரத கலாலயத்தின் திருமதி ஐங்கரன் அனைத்துலக மருத்துவ நல அமைப்புடன் இணைந்து திறன் பலகை ஒன்றை வழங்கியதன் மூலம் இப்பாடசாலை ஆசிரியர்- மாணவர்களின் இடைவினை கற்றல் -கற்பித்தல் செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பாடசாலையின் அதிபர் சி.சிவகுமார் மற்றும் அழகியல் பாட ஆசிரியர் திருமதி கருணரூபினி குணநிதி ஆகியோரின் வேண்டுதலில் வலிகாமம் வலயக்கல்வி அலுவலகத்தினரின் நேரடிப் பங்களிப்பில் இது நிறைவேறியுள்ளது.
இதன் ஆரம்ப வைபவத்தில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன்,முன்னாள் பணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சஞ்சீவன் ஆகியோருடன் இப்பாடசாலைமயின் கல்விச்சமூகத்தினரும் இணைந்து சிறப்பித்திருந்தார்கள்.
ஆசிரியர்கள் தம் வகுப்பு மாணவர்களை இணைத்து இடைவினையுடனான கற்றல் செயற்பாடுகளை நிகழ்த்தியமை சிறப்பான அம்சம் ஆகும். மற்றும் இவ்வைபவத்தில் அனைவருக்கும் ஆடிக்கூழ் மற்றும் மோதக பலகார வகைகள் பரிமாறப்பட்டன.