அண்மையில் சவுதி அரேபியா, ரியாத், இன்டர்கொன்டினென்டல் ஹோட்டலின், கிங் பைசால் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற IsDB வருடாந்த ஒன்றுகூடலில் அமானா வங்கி பங்கேற்றிருந்தது. IsDB இன் பொன் விழாவுடன் நடைபெற்ற IsDB இன் இந்த ஒன்றுகூடல், அங்கத்துவ நாடுகள் மற்றும் அதற்கு அப்பாலான சமூக-பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய ஐந்து தசாப்த கால அர்ப்பணிப்பான முயற்சிகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. அமானா வங்கியின் சார்பாக முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், பிரதம இடர் அதிகாரி எம் எம் எஸ் குவைலித் மற்றும் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
உலக பொருளாதார மாநாட்டுடன் நடைபெற்ற IsDB வருடாந்த ஒன்றுகூடல், “Cherishing Our Past, Charting Our Future: Originality, Solidarity, and Prosperity,” எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 க்கும் அதிகமான பேச்சாளர்கள், 4000 க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் மற்றும் 30 க்கு மேற்பட்ட அமர்வுகள் போன்றவற்றை நான்கு நாட்களில் முன்னெடுத்திருந்தது. நிலைபேறான மற்றும் மீண்டெழும் உட்கட்டமைப்புக்கு இஸ்லாமிய நிதியியலை பயன்படுத்தல் முதல் பன் பரிமாண வறுமையை சமாளிப்பதற்கான வழிமுறைகளை இனங்காணல் வரை இஸ்லாமிய வங்கியியலை பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. சூழல்சார் சவால்கள் பற்றிய தகவல்களை வட்ட மேசை மாநாடு உள்ளடக்கியிருந்ததுடன், தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலில் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளின் நிலையை பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தது.
IsDB இன் பிரதான மாநாட்டுடன் அனுபவங்கள், வெற்றிகரமான கதைகள் மற்றும் சிறந்த செயற்பாடுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட IsDB தனியார் துறை அமர்விலும் அமானா வங்கி பங்கேற்றிருந்தது. ஈடுபடுத்தும் கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்பாடல் அமர்வுகள் போன்றவற்றினூடாக, நிலைபேறான நிதியளிப்பு செயற்திட்டங்கள், நிதிசார் உள்ளடக்க செயற்பாடுகள், நிதிசார் இலக்கிய நிகழ்வுகள், பெண்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மற்றும் வங்கி ஸ்தாபக அனுசரணையாளராக திகழுவும் OrphanCare நிகழ்ச்சித்திட்டம் போன்றவற்றினூடாக சமூக சென்றடைவு செயற்பாடுகள் போன்றன அடங்கலாக நிலைபேறான செயற்பாடுகளினூடாக தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் வங்கி இந்த அமர்வுகளில் விளக்கங்களை வழங்கியிருந்தது.
இந்த இரு நிகழ்வுகளிலும் அமானா வங்கி பங்கேற்றிருந்தமை தொடர்பில் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கு, சமூக பொருளாதார சார் அபிவிருத்தி அடிப்படையிலான தொடர்பாடல்களுக்கான, இணைந்த செயற்பாடுகள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் போன்றவற்றுக்கு ஊக்கமளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு எனும் வகையில், IsDB வருடாந்த சந்திப்புகள் மற்றும் தனியார் துறை அமர்வில் பங்கேற்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இலங்கை IsDB அங்கத்துவ நாடாக அமைந்திருக்காத போதிலும், அமானா வங்கியின் பிரதம பங்காளராக IsDB முதலீடுகளை மேற்கொண்டு, இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமர்வுகளில் பங்கேற்று எமது வெற்றிகரமான கதையை ஏனையோருடனும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. மாநாட்டின் தொனிப்பொருளுக்கமைவாக, சமூகத்தின் நலனுக்காக நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை முன்னேற்றுவதில் எமது ஈடுபாடுகளை பேணி பங்களிப்புகளை தொடர்ந்தும் வழங்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.