கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டத்தை கல்வி அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
முதல் கட்டமாக மூதூர் சோனையூர் கல்லூரி, ஸ்ரீ ஹன்பஹா வித்தியாலயம், இலங்குதுறை முகத்துவாரம் இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மூதூர் -சேனையூர் மத்திய கல்லூரியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா, மூதூர் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாடசாலை மாணவர்களால் அழைத்து வரப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பாகவும் பாடசாலை சமூகத்தினரிடம் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது. இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம் என்றார். போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள், விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு யாருக்கு தகவல் வழங்குவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வை கிழக்கு மாகாண ரீதியில் ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியா மத்திய நிருபர் கியாஸ்