நிலைபேறான வர்த்தக நடைமுறைகளில் பின்பற்றுவதில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, நிலைபேறான தொழில்துறை மேம்பாட்டுக்கான பசுமைத் தொழில்துறை முன்முயற்சியின் (ISGSD 2024) ஆரம்ப சர்வதேச கருத்தரங்கில், உற்பத்திப் பயன்பாடுகளுக்கான தூய்மையான வலுசக்திப் பிரிவில் உயரிய தங்க விருதைப் பெற்றுள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, சூழலுக்கும் அதனுடன் தொடர்புடைய சமூகங்களுக்கும், சிறந்த சாதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, புத்தாக்கமான, தூய்மையான வலுசக்தி தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் யூனிலீவர் ஸ்ரீ லங்கா கொண்டுள்ள அற்புதமான சாதனைகளுக்கான கௌரவமாகும்.
யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் உலகளாவிய நிலைபேறானதன்மை மூலோபாய நடைமுறையில், காலநிலைக்கு சாதகமான நடவடிக்கைகளானது ஒரு அடிப்படைக் கோட்பாடாக விளங்குகின்றது. வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதில் நிறுவனம் ஆழ்ந்த உறுதியுடன் உள்ள அதே நேரத்தில், அது சேவையை வழங்குகின்ற சமூகங்களுக்குள்ளும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாக, யூனிலீவர் ஸ்ரீ லங்கா 2039 ஆம் ஆண்டுக்குள் அதன் முழு பெறுமதிச் சங்கிலியிலும் நிகர பூச்சிய காபன் வெளியீட்டை அடைவதற்கான இலட்சியம் மிக்க இலக்கை நிர்ணயித்துள்ளது.
யூனிலீவர் ஸ்ரீ லங்கா கொண்டுள்ள தூய்மையான வலுசக்திக்கான அர்ப்பணிப்பானது, மேம்படுத்தப்பட்ட வலுசக்தி செயற்றிறனை நோக்கிய அதன் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தில் நிரூபணமாக உள்ளது. யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் ஹொரண தொழிற்சாலையானது 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் மின்சக்தி நுகர்வை 66% இனால் குறைத்துள்ளது. இந்த வெற்றிக் கதையின் ஒரு முக்கிய உந்துசக்தியாக ஹொரண தொழிற்சாலையில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 2.33 MW சூரிய மின்சக்தித் திட்டம் அமைகின்றது. இது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் யூனிலீவர் ஸ்ரீ லங்கா கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கான தெளிவான சாட்சியமாகும்.
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் நிலைபேறான தன்மைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது, தூய வலுசக்தி உற்பத்தியை உருவாக்குவதற்கும் அப்பால் கடந்து செல்கின்றது. மீள்சுழற்சி செய்யக்கூடிய பொதியிடல், பிளாஸ்டிக் குறைப்பு, பிளாஸ்டிக் சேகரிப்பை ஊக்குவிப்பதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அதன் முயற்சிகளுக்காக, CSR மற்றும் பொறுப்பான உற்பத்தி பிரிவின் கீழ் நிறுவனம் வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. யூனிலீவர் ஸ்ரீ லங்கா இவ்வருடம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் 5 வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. களனி ஆற்றின் நீரின் தரத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் எனும் ஒரு முக்கியமான சூழல் சவாலை இந்த கூட்டாண்மை எதிர்கொள்கிறது. யூனிலீவர் ஸ்ரீ லங்கா அதன் தொழிற்சாலைச் சுவர்களுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ள சூழல் பாதுகாப்பில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.
இது பற்றி, யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் விநியோகச் சங்கிலிப் பணிப்பாளர் தமித் அபேரத்ன தெரிவிக்கையில், “பசுமை முன்முயற்சிகளுக்கான ISGSD 2024 தொழிற்துறை விருதுகளில் சிறந்த உற்பத்திப் பயன்பாடுகளுக்கான தூய்மையான வலுசக்தி (Clean Energy for Productive Uses) பிரிவில், தங்க விருதைப் பெறுவதில் நாம் நம்பமுடியாத அளவிற்கு பெருமையடைகிறோம். எமது வணிக மூலோபாயத்தின் மையத்தில், காலநிலைக்கு சாதகமான நடவடிக்கைகள் அமைகின்றன. அத்துடன், நாம் சூழல் பாதிப்புகளை குறைப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் பெருமிதம் கொள்கிறோம். எமக்குக் கிடைத்துள்ள அங்கீகாரமானது, புத்தாக்கமான தீர்வுகளைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கும் உண்மையான நிலைபேறான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்தை விரைவுபடுத்துவதற்கும் எம்மைத் தூண்டுகிறது.” என்றார்.
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பை கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) பாராட்டியுள்ளது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் (IDB) தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவிக்கையில், “தூய வலுசக்தி தொடர்பில் யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் சாதனைகள் ஏனைய தொழில்துறைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைகின்றன. விரிவான நிலைபேறானதன்மை திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம், அவை இலங்கையின் கைத்தொழில் துறைக்கு மேலும் பல நிலைபேறான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.” என்றார்.
பசுமை முன்முயற்சிகளுக்கான ISGSD 2024 தொழில்துறை விருதுகளில் யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் வெற்றியானது, விரிவான நிலைபேறான தன்மை நடைமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. தூய்மையான வலுசக்தித் தீர்வுகளை தழுவுவதற்கும், நிலைபேறான எதிர்காலத்திற்கான சூழல் பொறுப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்குமான நிறுவனத்தின் பயணம் அனைத்து அளவிலான ஏனைய வணிகங்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைகிறது.