காசாவில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மற்றொரு பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நுஸைரத் அகதி முகாமில் இருக்கும் இந்த பாடசாலை மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மேலும் 80 பேர் காயமடைந்திருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் ஐ.நாவினால் நடத்தப்படும் அபூ ஒரைபான் பாடசாலையே இலக்கு வைக்கப்பட்டுள்ளது. காசாவில் கடந்த எட்டு நாட்களில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை மீது நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதலாக இது உள்ளது.
அபூ ஒரைபான் பாடசாலையில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசால் குறிப்பிட்டதோடு இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நுஸைரத்தில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் அபூ ஒரைபான் பாடசாலை கட்டடம் இருக்கு பகுதியில் செயற்படும் பல பயங்கரவாதிகள் மீது விமானப் படை தாக்குதல் நடத்தியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள ஐ.நா. கட்டடங்கள், பாடசாலைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட அல் மவாசி மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கடும் தாக்குதல்களில் குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் ஐ.நாவின் பிரதான நிவாரண நிறுவனங்களாக செயற்படும் 190 அல்லது பாதிக்கும் அதிகமான வசதிகள் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருப்பதோடு இவைகளில் சில ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி விசாரணை ஒன்றுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு கடந்து ஒன்பது மாதங்களுக்கு மேலான காலத்தில் 38,600க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்திலும் காசா மீது இஸ்ரேல் வான், கடல் மற்றும் தரை வழியாக உக்கிர தாக்குதல்களை தொடர்ந்த நிலையில் இந்தப் போர் தணிவதற்கான எந்த சமிக்ஞையும் இன்றி நீடித்து வருகிறது. முன்னெடுக்கப்பட்டு வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய காசாவில் அல் மகாசி முகாமில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்து மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து சடலங்களை மீட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கத்தின் துணை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெற்கு முனை நகரான ரபாவில் செல் குண்டுகளை வீசியும் ஹெலிகொப்டர் மூலமும் கடும் தாக்குதல்களை நடத்தியதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று இஸ்ரேலிய கடற்படையும் காசாவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் ஆயுதப் பிரிவு தலைவர் முஹமது தெயிபை இலக்கு வைத்து நடத்தியதாக இஸ்ரேல் கூறும் அல் மவாசி மீதான தாக்குதலை அடுத்து ஹமாஸ் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது.
எனினும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றத்தில் இஸ்ரேல் உண்மையான தயார் நிலையை காண்பிப்பதாயின் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று நெருங்கி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாதம் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு இரு தரப்பும் இணங்கி இருப்பதாக நேட்டோ மாநாட்டின்போது பைடன் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (15) அமெரிக்காவை கடுமையாகச் சாடிய ஹமாஸ், சர்வதேசம் தடை செய்த ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கி இனப்படுகொலைக்கு ஆதரவு அளிக்கிறது என்று குற்றம்சாட்டியது.
‘இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அனைத்து வகையான தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியதன் மூலம், எமது பலஸ்தீன மக்களின் குழந்தைகள் மற்றும் பெண்களின் இரத்தத்தின் மீதான அமெரிக்க வெறுப்புணர்வை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று ஹமாஸ் அரச ஊடகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தம் வகிக்கின்றன. எனினும் இதுவரை இடம்பெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி நீடித்து வருகிறது.
இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் காசாவில் தொடரும் தாக்குதல்களில் அந்தப் பகுதி சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பதோடு அங்குள்ள 2.4 மில்லியன் மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் அங்கு உணவு, மருந்து மற்றும் ஏனைய அடிப்படை பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
வான், தரை மற்றும் கடல் வழியாக தொடர்ந்து குண்டு மழை