ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய இலங்கையில் பிறந்த முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸின் (France) வெதுப்பக உரிமையாளர் (Baker) தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று (15.07.2024) மாலை 6.00 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது. மேலும் பரிஸில் 3ஆவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய ஊர்வலம் நடைபெறுகிறது.
இந்நிலையில், இலங்கையிலிருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றடைந்த தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
இவர், பரிஸ் நகரில் கடந்த வருடம் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றவர் ஆவார்.
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் இவர் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக மருத்துவ மாணவரான ஹொங்கொங்கில் பிறந்த இலங்கை தமிழர் ஹரேஷ் செல்வஸ்கந்தன் 2012 இல் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியிருந்தார் .முனைவரான (Dr) இவர் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலையில் ஆராய்ச்சியாளராக உள்ளார்)