- நாட்டை முன்னேற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை சிதைக்கவே இன்று பலரும் முயல்கின்றனர்– சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு
- பொருளாதார யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி
- ஜனாதிபதியின் தலைமைத்துவம் எதிர்காலத்திலும் அவசியம் – சட்டத்தரணிகள் தெரிவிப்பு
சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
”அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருளாதாரக் கட்டமைப்பை சீர்குலைக்க எவரும் செயற்படக் கூடாது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட கடந்த சில வாரங்களிலும் அதற்கு முன்னரும் வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டே இவை முன்னெடுக்கப்பட்டன.” என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
”கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டது. நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு குழு உருவானது. அவர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி செயல்பட்டனர். எனவே, எந்தக் கட்சியையும் சாராதவர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த இடத்தில் உள்ளனர். 2022 மே 09 ஆம் திகதி நடந்த சம்பவத்தைப் பற்றி நான் மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை. நாட்டு மக்கள் ஒடுக்கப்பட்டதால், போராட்டங்கள் வெடித்தன. இந்த பிரச்சாரங்களை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இறுதியில் சம்பிரதாய கட்சிகளால் நாட்டின் தலைமைத்துவத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
2021 டிசம்பர் 2021 இல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாட்டில் இவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் அவர் என்னிடம் கூறினார். இதனை நான் அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவித்தேன். உலக வங்கிப் பிரதிநிதிகள் இங்கு வந்தபோதும் இதுபற்றி ஆராய்த்தோம். இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தன.
இந்தக் கூட்டத்திற்கு தமிழ் கூட்டணியின் இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே வருகை தந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான் மாத்திரமே பங்கேற்றேன். மற்ற எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. அது தவறான செயல் என்றே சொல்ல வேண்டும்.
அந்த சமயத்தில் நாட்டில் பாரிய நெருக்கடி நிலை இருந்தது. அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்வது நம் அனைவரின் பொறுப்பாக இருந்தது. அந்தப் பொறுப்பை யாராலும் தவிர்க்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்தான் மாற்றுப் பிரதமர். அவர் பஸ் டிரைவர் அல்ல. எனவே, இதில் பங்கேற்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அன்றிருந்த நெருக்கடி தொடர்பில் செயற்பட முன்வரவில்லை.
அதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 9ஆம் திகதி பதவி விலகினார். அப்போது ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கும் நிலையில் மொட்டுக் கட்சி இருக்கவில்லை. அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். நாங்கள் பிரிட்டிஷ் முறையைப் பற்றி பேசுவதால், மாற்று பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தால், சம்பிரதாயப் படி எதிர்க்கட்சித் தலைவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அது தொடர்பில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. யாராக இருந்தாலும் உதவத் தயார் என நான் அன்று கூறினேன். ஆனால், மே 10 ஆம் திகதி பொறுப்பேற்க வருமாறு அறிவிக்கப்பட்டும் அவர் வரவில்லை. பிரதமர் பதவியை ஏற்பதில்லை என முடிவு செய்திருந்தனர். அவர் தனது கடமையை நிறைவேற்றவில்லை. குறுகிய அரசியல் நோக்கில் செயற்பட முயன்றதால் அவரால் முன்நோக்கி வர முடியவில்லை.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாட்டை எவ்வாறு மீட்பது என்பது குறித்து சிலர் யோசனைகளை முன்வைத்தனர். ஆனால் பொறுப்பு தேடிவந்த போது ஏற்க விரும்பவில்லை. ஜே.வி.பி இதற்காக முயற்சி கூட எடுக்கவில்லை. ஆனால் இந்த பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம். அப்போது, நாடு வங்குரோத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஜனாதிபதி பதவியில் யார் இருக்கிறார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த நேரத்தில் நான் நாட்டைக் காப்பாற்ற விரும்பினேன்.
அந்த சமயத்தில் இவ்வாறான சவால்களை நாம் எதிர்கொண்டிருந்தோம். 1971 கிளர்ச்சியின் போது ஜே.ஆர். ஜெயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு வழங்கினார். அவரது மகனைக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்தார். ஆனால் நிலைப்பாட்டை மாற்றவில்லை. 1989 ஆம் ஆண்டில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிப்பதாக சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர் ரத்வத்த ஆகியோர் ஜனாதிபதி பிரேமதாசவிற்கு அறிவித்திருந்தார்கள். இது தொடர்பில் நாம் நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் எங்களைக் குறை கூறாதீர்கள் என்று அன்றிருந்த இராணுவத் தளபதி கூறியிருந்தார். அவர்கள் இருவரும் உடன்பாடு தெரிவித்திருந்தனர். இவ்வாறே நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடி செயற்பட்டிருக்கிறோம்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது சிறிமாவோ பண்டாரநாயக்கவும் டட்லி சேனாநாயக்கவும் இணைந்து செயற்பட்டனர். ஏனைய சந்தர்ப்பங்களில் மோதல்கள் இருந்தன. ஆனால் அது ஒரு பிரச்சினை அல்ல. ஆசியாவிலேயே வெற்றி பெற்றவருக்கு அதிகாரத்தை கையளித்துவிட்டு தேர்தல் முடிவுகளின்படி வெளியேறும் ஒரே நாடு இலங்கை. நீதித்துறை சுதந்திரம் பற்றி எவ்வளவோ பேசினாலும் இலங்கையில் தான் நீதித்துறை செயற்படுத்தப்படுகிறது. இந்திரா காந்தியின் ஆட்சியின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத்தில் எழுந்த பிரச்சினைகளை நாம் அறிவோம்.
இந்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது தான் ஜூலை 09ஆம் திகதி பாரிய சம்பவமொன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை விட்டு முன்னாள் ஜனாதிபதி வெளியேறினார். அப்போது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு எனக்கு அழுத்தம் கொடுத்தனர். ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுப்பது? நடுக் கடலுக்குச் சென்று ஜனாதிபதியை நான் தேட வேண்டுமா? நான் விலகுவதானால் பெரும்பான்மையுள்ள ஒருவர் முன்வர வேண்டும் என்று சொன்னேன். நீங்கள் பதவி விலகுங்கள். யாராவது பொறுப்பை ஏற்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
பொறுப்பேற்பவரை முன்னிறுத்துமாறு நான் கூறினேன். அதன்பின்னர் சபாநாயகரை பதவியேற்குமாறு கோரினார். என்னால் பாராளுமன்றத்தை நிர்வகிக்க முடிந்தாலும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னால் ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது.
இறுதியாக பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்துக்குள் இருந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு இராணுவத் தளபதி அறிவித்த போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அப்போது, போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி வருவதாக இராணுவ தளபதிக்கு தகவல் கிடைத்திருந்தது. அதன் பின்னர் 05 நிமிடங்களில் அனைவரும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர். பாராளுமன்றத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதிக்கு அறிவிக்க வேண்டி ஏற்பட்டது. இது குறித்து சபாநாயகருக்கும் அறிவித்தேன்.
தேவையான சமயத்தில் பொறுப்பேற்காமல் கோஷங்களை எழுப்பினர். கலந்துரையாடலுக்கு வருமாறு பலமுறை தெரிவித்தும் ஒருவர் கூட வரவில்லை. அதன் பின்னர் இந்த நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவானது. நான் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவளித்தன. மேலும் அனைத்து கட்சிகளில் இருந்தும் எனக்கு எதிராக வாக்களித்தன. மொட்டுக் கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினர் எதிர் கட்சியில் அமர்ந்தனர். ஐக்கிய மக்கள் சக்தி குழுவொன்று எனக்கு ஆதரவாக வாக்களித்தது. நாங்கள் ஆட்சி அமைத்தோம். முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். அவற்றில் எதையும் நான் மாற்ற முயலவில்லை. சிலர் விலகினர். அது வேறு விடயம். ஆனால் நான் யாரையும் மாற்ற முயலவில்லை.
பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து நாட்டுக்காக பணியாற்றினர். கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். வெளியில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. அன்றிலிருந்து இந்த அரசாங்கம் ஆச்சரியமாக முன்னோக்கிச் சென்றது. இன்று கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டு இந்த சாதனைகளை அடைந்துள்ளோம். நாங்கள் இப்போதுதான் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளோம். இப்போது உலகம் எம்மை கடனை செலுத்தக் கூடிய நாடாக ஏற்றுக்கொண்டுள்ளது.
நாம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் கடன்வழங்குநர் குழு, சீனா எக்சிம் வங்கி மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திர உரிமையாளர்களுடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துகிறோம். நாங்கள் வெவ்வேறு வாக்குறுதிகளை வழங்க முடியாது.
இனிமேலும், சம்பிரதாய அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மேலும், நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன்போது, ஏற்றுமதியை நோக்கிய நவீன பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
85 பில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2048 ஆம் ஆண்டாகும்போது 350 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். சரியாக செயல்பட்டால் அந்த இலக்கை அடையலாம். சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகள் ஒரே நிலையில் இருந்து செயற்பட்டதால் இன்று முன்னேறியுள்ளன. அரசியல் செய்யும் போது அடிப்படை ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இன்று பலர் இந்தக் கட்டமைப்பை உடைக்க விரும்புகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் கடந்த வாரமும் அதற்கு முன்னரும் நாம் எத்தனை வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டோம். இந்த ஆண்டு செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருப்பதே இதற்குக் காரணம்.
வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கட்சியைப் பிடிக்கவில்லை என்றால் மற்றொரு கட்சிக்கு வாக்களியுங்கள். ஆனால் இந்த பொருளாதார கட்டமைப்பை உடைக்கவே அவர்கள் முயன்றனர். இப்போது நாடு பெற்ற வெற்றியை உறுதி செய்து, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதா அல்லது பழைய முறைப்படி தொடர்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இன்று இந்தச் சந்திப்பிற்கு நீங்கள் வருகை தந்தமை பாரிய பலம் என்றே கூற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம். 05 வருடங்களின் பின்னர் மீண்டும் கட்சி அரசியலில் ஈடுபடுவோம். நாட்டிற்கு நிலையான பொருளாதார முறைமை அவசியம்.
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறுவர் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அதற்கு நடுவில் வலதுசாரியும், இடதுசாரியும் நாம் போட்டிக்குப் போகாமல் அந்த தொகுதிகளில் மூன்றாம் தரப்பை நீக்குவோம் என்று முடிவு செய்தனர். எனது கட்சியில் மூன்றாம் தரப்பு இருந்தால், எனது கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நீங்களும் உங்கள் கட்சியை நீக்க வேண்டும். இப்போது இது வேறு பக்கம் திரும்பியுள்ளது. அதற்கேற்ப இணைந்து செயல்பட்டு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலையை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியை உறுதிப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்னோக்கி செல்வோம். நாம் எப்போதும் பிச்சைக்கார நாடாக இருக்க முடியாது. பொருளாதார ரீதியில் கீழ் நோக்கிச் செல்ல முடியாது. வலுவான பொருளாதாரத்துடன் நாட்டை முன்னேற்ற வேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுமாறு அழைக்கிறோம். இன்று உங்களின் வருகைக்கு நாம் நன்றி கூறுகிறோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அப்போதைய நிதியமைச்சராக இருந்த நான், எதிர்க்கட்சித் தலைவரிடம் கதைத்தேன். ஹர்ஷ டி சில்வாவிடம் கதைக்குமாறு அவர் கூறினார். பின்னர் நான் ஹர்ஷ டி சில்வாவுடன் கதைத்தேன். அப்போது, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை சந்திக்க முடியுமா என என்னிடம் அவர் கேட்டார். எங்கே அவர்களை அனுப்ப வேண்டுமா என்று நான் கேட்டேன்.
அவர்களை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தற்போதைய நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவே அன்றும் நிதி அமைச்சின்செயலாளராக இருந்தார். தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக உள்ள நந்தலால் வீரசிங்கவே, அப்போதும் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் அவர்களுடன் கலந்துரையாடினர்.
நாட்டில் நிலைமை எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. இறுதியில் தற்போதைய நிலையில் நாட்டைக் பொறுப்பேற்க முடியாது என அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க நிபந்தனைகள் இடவில்லை. நான் நிதியமைச்சராகப் பணியாற்றியபோது அவர் ஆலோசனைகளையும் வழங்கினார். அவர் தன்னைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர் இந்த நாட்டின் நிலைமையைப் பற்றி மட்டுமே சிந்தித்தார். அதன்படி இன்று பொருளாதார பொறிமுறை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அது வெற்றியடைந்துள்ளது. அதன் பிரதிபலன்களைக் கண்டுகொள்ள முடிந்துள்ளன. ஆனால் இது தொடர்பான விமர்சனங்களைத் தவிர மாற்றுக் கருத்தை முன்வைக்க யாரும் முன்வருவதில்லை. ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார அடித்தளம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது. எனவே அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவளித்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த,
”பாராளுமன்ற வரலாற்றில் இந்த இரண்டு வருடங்கள் அளவுக்கு புதிய சட்டமூலங்களும் திருத்தங்களும் கொண்டுவரப்பட்ட இரண்டு வருடங்கள் இருந்ததில்லை. ஜனாதிபதியின் இந்த வேலைத் திட்டத்தில், எதிர்காலத்தில் மேலும் பல புதிய சட்டமூலங்கள் மற்றும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். கடந்த இரண்டு வருடங்கள் மிகவும் சவாலானவை. இந்த இரண்டு வருடங்களிலும் ஜனாதிபதி சகல துறைகளுக்கும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.
பாடப்புத்தகங்கள் அச்சிட முடியாமலும், சீருடை வழங்க முடியாமலும், விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆசிரியர்களிடம் எரிபொருள் இல்லாத காலகட்டத்தையும் சந்தித்தோம். தற்போது அந்த நிலையில் இருந்து வெளியே வந்துள்ளோம். அந்த கடுமையான பொருளாதார நிலை, இந்த இரண்டு வருடங்களில் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்பால் செல்ல வேண்டுமாயின் இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அதை எப்படி அடைவது என்பதை இந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி முன்னெடுத்துக் காட்டியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.