எரிபொருள் கொண்டு செல்லும் கொள்கலன்கள் முறையாக சுத்தம் செய்யப்படாது சமையல் எண்ணெய் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தகவல் சீனாவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பிலான கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் சமையல் எண்ணெய் மற்றும் சிரப் வகைகள் போன்ற உணவு உற்பத்திகளை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவை சரியான வகையில் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் அரச செய்தி நிறுவனமான ‘பீஜிங் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொள்கலன்களைச் சுத்தம் செய்யாமல் அவ்வாறு சமையல் எண்ணெயைக் கொண்டு செல்லும் நடைமுறையால் செலவு குறைகிறது என்று லொறி ஓட்டுநர்கள் கூறியதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கலப்படம் குறித்து இணையவாசிகள் பலரும் கோபத்தை வெளிப்படுத்தினர். விசாரணை வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிலர் கூறினர்.