ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சொந்தம் கொண்டாடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோருக்கிடையில் பாராளுமன்றத்தில் நேற்று கடும் தர்க்கம் நிலவியது.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்ற தயாசிறி ஜயசேகர எம்பிக்கு இடையூறு விளைவித்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலென, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரச அனுசரணையுடன் சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சபையில் தெரிவித்த அவர்,நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் தாம், சிறை செல்லும் நிலை கூட வரலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை யார் இல்லாதொழித்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கியது நாங்களா? என அமைச்சர் மஹிந்த அமரவீர கேள்வியெழுப்பியவுடன் மைத்திரிபால சிறிசேன, லசந்த அழகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையில் கடும் தர்க்கம் நிலவியது.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவைப் போன்று மோசடியான நிறுவனம் எதுவும் கிடையாது.இந்த ஆணைக்குழுவுக்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை தாம், நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை செயற்படுத்தல் தற்போது பிரச்சினைக்குரியதாக உள்ளது.சுதந்திரக் கட்சியின் உள்ளக பிரச்சினை அரச அனுசரணையுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு தரப்பினர் கட்சி தலைமையகத்தை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளார்கள்.
சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர் சுதந்திரக் கட்சியின் அலுவலகத்துக்கு செல்லும் போது அரச அனுசரணையுடன் ஒரு கும்பல் அவருக்கு இடையூறு விளைவித்துள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன அங்கொட செல்ல வேண்டும் அல்லது வெலிக்கடை செல்ல வேண்டும் என அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் எமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறை தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும். இவ்வாறான கூற்றுக்களினால் நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என எண்ணத் தோன்றுகிறது.
சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரச அனுசரணையுடன் அச்சுறுத்தப்படுகிறார்கள்.கம்பஹா மற்றும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.கட்சியின் உள்ளக பிரச்சினையை உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு சிலர் தடையாக செயப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதன்போது எழுந்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இவர் அங்கொட அல்லது வெலிக்கடை செல்ல வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. செயற்பாடுகளின் பிரதிபலனுக்கு அமைய அங்கொட செல்ல நேரிடலாம்.
தயாசிறியை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை இவர் தற்போது குறிப்பிடுகிறார்.கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறியை யார் நீக்கியது,நாங்களா? சுதந்திர கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவரை கட்சியின் தலைவராக நியமித்தது யார்?
சுதந்திர கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும்,செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எந்த நீதிமன்றத்திலும் இந்த நியமனத்தை எவரும் சவாலுக்குட்படுத்தவில்லை. மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக பதவியேற்கும் போது 140 பேர் கட்சியின் உறுப்பினராக இருந்தார்கள்.ஆனால் இன்று கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்தின் பக்கம் செல்லக் கூடாது என்று கட்சி செயற்குழு தீர்மானம் எடுத்தது.ஆனால் இவர்கள் அமைச்சுப் பதவிக்காக அரசாங்கத்தின் பக்கம் சென்றார்கள்.இதனால்தான் கட்சி பலவீனமடைந்தது.எமது உறுப்பினர்களுக்கு இவர்களே அச்சுறுத்தல் விடுக்கின்றார்கள் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, தொலைத்தொடர்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் சுதந்திரக் கட்சி பற்றி பேசப்படுகிறது.நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் சென்றதால் கட்சி பலவீனமடையவில்லை. 2015 ஆம் ஆண்டு மஹிந்தவுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு எதிர்ப்பக்கம் சென்றதால்தான் சுதந்திரக் கட்சி பலவீனமடைந்தது.கட்சித் தலைவர் பதவியை துறந்து விட்டு இங்கு வந்து கூச்சலிடுவது பயனற்றது.எம்மைப் பேச வைக்காதீர்கள்.குழப்பிக் கொண்டால் பல விடயங்களை வெளிப்படுத்த நேரிடும் என்றும் எச்சரித்தார்.இவர்களுக்கிடையில் சில நிமிடங்கள் சபையில் சர்ச்சை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)