தாய்லாந்தின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக தாய்லாந்துக்கான இந்திய தூதர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. க்கு அளித்துள்ள விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள தூதுவர் நாகேஷ் சிங், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (எப்.டி.ஐ) கவர்ந்திழுப்பதற்கு ஏற்ற கொள்கைகளையும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் தாய்லாந்து கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களும் தாய்லாந்தில் முதலீடுகளை மேற்கொள்கின்றன.
அதேபோன்று தாய்லாந்து நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. என்றாலும் தாய்லாந்தின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளன.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை எளிதாக்கும் வேலைத்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்பேச்சுவார்த்தை நிறைவுற்றதும் இரு தரப்பினரும் அடைந்து கொள்ளும் பிரதிபலன்கள் பாரியதாக அமையும்’ என்றுள்ளார்.
அதேநேரம் கடந்த பெப்ரவரியில் புத்த பிரானின் புனித சின்னங்கள் தாய்லாந்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அந்நாட்டின் பல பிரதேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இச்சின்னங்களை சுமார் 4.2 மில்லியன் தாய்லாந்து மக்கள் தரிசித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தாய்லாந்தில் இச்சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதோடு அந்நாட்டு மக்கள் மத்தியில் நல்லெண்ணம் பெரிதும் வளர்ச்சியடையவும் வழிவகுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.