– சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை
இன்று (08) அத்துரிகிரியவில் பச்சை குத்தும் மையம் திறப்பு விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானை இம்ரானுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் கொழும்பு 07 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துருகிரிய நகர சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டடத்தின் மேல் தளத்தில், இன்று காலை பச்சை குத்தும் நிலையமொன்று திறக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
துலான் சஞ்சுள எனும் பச்சை குத்தும் நபரினால் இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம அதிதிகளாக, பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
55 வயதான கிளப் வசந்த என்ற பிரபல வர்த்தகரும், 38 வயதுடைய நபருமே இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பிரபல பாடகி கே. சுஜீவாவும் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இரு பெண்களும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சுஜீவா மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மற்றைய இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலை 10.15 மணியளவில் ஒருவல வீதியூடாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தில் இருந்து மீண்டும் ஒருவல வீதிக்கு திரும்பி குறித்த கட்டடத்திற்கு அருகில் வீதியில் நிற்பது CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர், துப்பாக்கி ஏந்திய இருவர் மேல் தளத்தில் உள்ள பச்சை குத்தும் மையத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
அதில், முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள், பச்சை குத்தும் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடுகின்றனர். துப்பாக்கிச்சூடு தாக்குதலின் போது, அந்த அறையில் ஒளிந்தவாறு தப்பிப்பதை காணக்கூடியதாக உள்ளதுடன், அவர் கிளப் வசந்தவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திறப்பு விழாவில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி பச்சை குத்தும் நபர் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, நிலையத்தில் உள்ள இருக்கைகள் அருகே பல ஐந்தாயிரம் ரூபாய் நாணயத் தாள்களையும் காணக்கூடியதாக உள்ளது.
பிரபல பாடகி கே. சுஜீவாவும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் வந்து இரண்டு T56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் காரை வழியில் விட்டுவிட்டு வேனில் தப்பிச் செல்வதும் கெமராக்களில் பதிவாகியுள்ளன.
காயமடைந்த சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த, அவரது மனைவி மெனிக் விஜேவர்தன, மற்றுமொரு நபர் மற்றும் பெண்ணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளப் வசந்த என அழைக்கப்படும் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா, மற்றும் அத்துருகிரிய – ரத்துவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான நயன வாசல விஜேசூரிய ஆகிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு பெண்களின் நிலைமை சிறிது கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களில் கிளப் வசந்தவின் மனைவிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்றைய நபர் முதுகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளப் வசந்த என்பவரே இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் பிரதான இலக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகள் வந்த காரில் சாரதி உட்பட நால்வர் இருந்ததாகவும் அவர்களில் இருவர் துப்பாக்கிகளுடன் மேல் தளத்திற்குச் சென்ற நிலையில், மற்றுமொருவர் ரி56 ரக துப்பாக்கியுடன் காரில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கொலையாளிகள் கொரதொட்ட பகுதியில் தமது காரை நிறுத்திவிட்டு வேறு வேனில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேனில் வேறு பகுதிக்கு சென்ற மர்மநபர்கள் மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள் வந்து தப்பிச் சென்ற வாகனங்கள் அனைத்தும் போலி இலக்கத் தகடுகளைக் கொண்டவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தை கடுவெல பதில் நீதவான் டி.பி.ஜி கருணாரத்ன இன்று பிற்பகல் நேரில் பார்வையிட்டார்.
அந்த இடத்தில் பல தோட்டா உறைகள் காணப்பட்டதாகவும், அங்கு “KPI” போன்ற பயன்பாடு காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் துப்பாக்கி ஒன்றும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பித்த பச்சை குத்துபவரான துலான் சஞ்சுளவுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
திட்டமிட்டு இந்த பச்சை குத்தும் நிலையத்தை திறப்பதற்கு பிரதம அதிதியாக சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த அழைக்கப்பட்டிருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளப் வசந்தவின் மனைவியின் கைப்பையில் கைத்துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு அந்த இடத்தில் சலூன் நடத்தப்பட்டதாகவும், அங்கும் அவ்வாறான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார்.
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 2 ஆனது (UPDATE)