Friday, October 4, 2024
Home » குடும்ப உறவுகளை பேணி வாழ்வோம்

குடும்ப உறவுகளை பேணி வாழ்வோம்

by Rizwan Segu Mohideen
July 5, 2024 11:28 am 0 comment

குடும்ப உறவுகளை பேணி வாழ்வதன் மூலம் நாடப்படுவது யாதெனில் எமது பெற்றோர், உடன்பிறப்புகள், பிள்ளைகள் மற்றும் நெருங்கிய தூரத்து உறவினர்களுடன் அன்பு, பரிவு, விட்டுக்கொடுப்பு, உதவி, ஒத்தாசை, நல்ல, தீய விஷயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குதல் ஆகியவற்றை முறையாக பேணி வருவதாகும்.

மக்கள் இயந்திர வாழ்க்கைக்குப் பழகிப்போன இக்காலத்தில் குடும்பக் கட்டமைப்பு மிக மோசமாகச் சிதறுண்டு கிடப்பதை அவதானிக்க முடிகிறது. நமது பிள்ளைகளுக்கு கூட நம் உடன் பிறந்த சகோதரன் என்ன முறை? யார்? என்று தெரியாத ஓர் அந்நியம் எம்மிடையே வியாபித்து காணப்படுகிறது. இது மறைக்க முடியாத உண்மையாகும். மகன் தந்தையுடன் பேசுவதில்லை, தாய்க்கும் மகளுக்கும் சண்டை, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கூட வருடக்கணக்கில் காரணமின்றி உறவறுந்து போயுள்ள துர்ப்பாக்கிய நிலை, சகோதரர்கள் முகம் சுளித்து முதுகுகாட்டி செல்லும் நிலை, மூத்த உறவுகளை பிள்ளைகள் ஒருத்தருக்கொருவர் பந்தாடி அவனின் வீட்டுக்குப் போ, இவனின் வீட்டுக்குச்செல் என அலைக்கழித்து கடைசியில் வயோதிபர் மடங்களில் தள்ளிவிட்டு வரும் நிலை, அற்ப விஷயத்துக்காக சகோதரர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் நிலை.

இவ்வாறு உறவு முறைகளைப் பகைத்து பிரிந்து வாழ்வது சர்வ சாதாரணமாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கின்றோம். ஆகவே அல்லாஹ்வும் அவன் தூதர் (ஸல்) அவர்களும் உறவு முறைகளை பேணி வாழ்வதன் அவசியத்தை பல சந்தர்ப்பங்களில் எடுத்தியம்பியுள்ளனர்.

அந்த வகையில் அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில், ‘அந்த இறை விசுவாசிகள் அல்லாஹ் சேர்ந்து வாழுமாறு கட்டளையிட்ட உறவினர்கள் விடயத்தில் அவனை அஞ்சிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கடினமான விசாரணையை பயந்து வாழ்வார்கள் (சூரா றஃத் :12) என்று குறிப்பிட்டுள்ளான்.

மற்றோரிடத்தில், ‘நீங்கள் புறப்பட்டு வெளியேறி சென்றால் பூமியில் குழப்பம் விளைவித்து உறவுகளை துண்டித்து விடுவீர்களோ.. அப்படிப்பட்ட அவர்களைத்தான் அல்லாஹ் சாபமிட்டு அவர்களின் பார்வைகளை குருடாக்கி செவிடர்களாகவும் ஆக்கிவிட்டான். (சூரா முஹம்மத் 22)

என்றும் அவன் குறிப்பிட்டு வைத்திருக்கிறான். அதேநேரம் நபி(ஸல்) அவர்கள், ‘உறவு முறையானது அல்லாஹ்வின் அர்ஷிலே தொங்கிக்கொண்டு இவ்வாறு கூறுகிறது.. ‘எனது இறைவனே.. என்னை சேர்த்து நடந்தவர்களை நீயும் சேர்த்துக் கொள்வாயாக.. என்னை துண்டித்தவர்களை நீயும் துண்டித்து விடுவாயாக…
(ஆதாரம்: முஸ்லிம்).

அல்லாஹ் தனது படைப்பினங்கள் அனைத்தையும் படைத்து முடிந்தவுடன் உறவுமுறை என்னும் பந்தமானது “எனது ரப்பே…. என்னை துண்டித்து வாழ்பவர்களுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்” என வினவ அல்லாஹ் உன்னை துண்டித்தவர்களை நானும் துண்டித்து விடப் போகிறேன். உன்னை சேர்ந்து நடந்தவர்களை நானும் சேர்த்துக் கொள்ளப்போகிறேன் என்பதை கண்டு நீ திருப்திப்பட மாட்டாயா? அதை நான் உனக்கு வழங்குகின்றேன் என்று அல்லாஹ் எடுத்துரைத்தான்.
(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மேலும், ‘ஒரு மனிதன் புரியும் குற்றங்களுக்காக அவனை அல்லாஹ் உடனடியாகத் தண்டிப்பான் அல்லது தாமதித்து தண்டனை வழங்குவான். ஆனாலும் உலகிலே உடனடி தண்டனையையும் மறுமையில் கடும் வேதனையும் சித்தப்படுத்தி வைத்திருக்கும் பாவங்களில் உறவு முறைகளை துண்டிப்பதையும் மானக்கேடான விபசாரத்தையும் விட கடுமையானது வேறு எதுவும் இல்லை’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹ் திர்மிதி)

அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறி இருப்பதாவது, ‘நான்தான் ரஹ்மான்.. எனும் அளவற்ற அருளாளன். ரஹ்ம் எனும் உறவு முறையை எனது ரஹ்மான் என்ற பெயரில் இருந்தே உருவாக்கியுள்ளேன். எனவே யார் உறவினர்களை நேசித்து வாழ்கிறார்களோ அவர்களை நானும் நேசிப்பேன். உறவு முறைகளை துண்டித்து நடப்போரை நானும் சிதறடித்து விடுவேன்.
(ஆதாரம்: ஸஹீஹ் அபூதாவுத்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள், ‘யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமையும் விசுவாசித்த மனிதர் தனது விருந்தினரை உபசரிக்கட்டும்.. அல்லாஹ்வையும் மறுமையையும் விசுவாசித்த மனிதர் தனது குடும்ப உறவினர்களை சேர்ந்து நடந்து கொள்ளட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

மேலும் உறவு முறையைப் பேணுவதன் அவசியம் குறித்து குறிப்பிட்டுள்ள நபி (ஸல்) அவர்கள், ‘ சலாம் முகமன் கூறுவதை அதிகப்படுத்துங்கள்.. பசித்தோருக்கு உணவளியுங்கள்… உறவினர்களை சேர்ந்து வாழுங்கள்… நள்ளிரவில் மனிதர்கள் தூங்கும் வேளையில் நள்ளிரவில் நீங்கள் துயிலெழுந்து இறைவனை வணங்குங்கள்.. (இவற்றின் பொருட்டால்) பாதுகாப்பாக சுவனம் நுழைவீர்கள் எனவும் கூறியுள்ளார்கள. (ஆதாரம்: இப்னுமாஜா)

அத்தோடு ‘உம்மில் யாராவது ஒருவர் தனது ஜீவனோபாயம் விசாலயமாக்கப்பட்டு ஆயுள் நீடிக்கப்படுவதை விரும்புவராயின் அவர் தன் உறவினர்களைச் சேர்ந்து நடந்து கொள்ளட்டும் என்றும் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

மௌலவி ஏ.ஜி.எம். ஜெலீல் (மதனி)
மஃஹதுஸ் ஸுன்னா அரபுக் கல்லூரி
காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x