பூஜ்ய ஸ்ரீ சுவாமி பிரம்மயோகானந்தா மஹாராஜ் அவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி மாலை 4- மணி தொடக்கம் 6 மணிவரை கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாயி நாதர் சரணாலயத்துக்கு வருகை தர இருக்கிறார்.
அவர் ‘வேதநெறி வாழ்க்கை முறை’ என்னும் தலைப்பில் ஆன்மிக உரை நிகழ்த்தி பின்பு பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்.
சுவாமிகள் தமிழ்நாடு, பாரதத்தைச் சேர்ந்த ஒரு ஆன்மீக ஆசிரியர் ஆவார். அவர் உலகளாவிய அன்பையும் நல்லிணக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறார். ஏழைகளுக்கு சேவை செய்வதை தேசசேவையாகக் கருதி, தனது 17 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆன்மீகப்பணி ஆற்றி வரும் சுவாமிகள், 1995 ஆம் ஆண்டில் சென்னையில் யோக சாந்தி குருகுலத்தை நிறுவி, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு யோகா கற்பித்தார்.
அயோத்தியில் இராமர் கோயில் நிர்மாணத்திற்காக, 16 கோடிக்கும் அதிகமான காயத்ரி ஜெபம், 328 கோடிக்கும் அதிகமான விஜயமந்திர ஜபத்தைச் செய்ய பக்தர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தினார்.
கிராம மக்களை ஈஸ்வரருடன் இணைக்க ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கிராமங்களில் 27 இற்கும் மேற்பட்ட கோயில்களின் கும்பாபிஷேகங்களை நிகழ்த்தினார். வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்து, கிராம மக்களுக்கு 2000 இற்கும் மேற்பட்ட தீபங்களை விநியோகித்து, நாளைத் தொடங்க ஒரு விளக்கை ஏற்ற ஊக்குவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு ஸ்லோகங்கள் கற்பித்தல் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பது போன்றவை, அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் வருகை மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உதவியது. அத்துடன் குற்ற வீதம், வீட்டு துஷ்பிரயோகத்தைக் குறைக்க உதவியது. அவர் நடத்திய மதுபோதை ஒழிப்பு இயக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது.
அவரது நீலமங்கலம் ஆசிரம வளாகத்திற்குள், பண்டிகை நாட்களில் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வதுடன் நின்று விடாமல், உஜ்ஜைனி மகா காளேஷ்வர் கோவிலையும் சுவாமிகள் கட்டியுள்ளார்.
பாரத் மாதாவுக்கு ஒரு தனிக்கோயிலைக் கட்டி மே 2023 இல் கும்பாபிஷேகம் நடத்தினார். வேதாந்த ஆசிரியரான சுவாமிஜி இதிகாசங்கள், பகவத் கீதை, 10 முக்கிய உபநிடதங்கள், வியாசரின் பிரம்ம சூத்திரங்கள் போன்றவற்றைக் கற்பித்து வருகிறார்.
அகண்ட் ஐக்யா பாரத் யாத்திரையின் வழியில் சுவாமிஜி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளுக்கும் பயணித்துள்ளார்.
சுவாமிஜியின் அமைதியான பிரசன்னத்தில் மக்கள் அமைதியை அனுபவித்து, அவரது ஞான உபதேசங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்கின்றனர்.
இலங்கை சீதையம்மன் ஆலயம், ரம்பொட ஆஞ்சநேயர் ஆலயம், அவிசாவளை சீரடி பாபா ஆசிரமம், கொழும்பு தெமட்டகொட ஸ்ரீ செந்தில்குமரன் ஆலயம் மற்றும் தொண்டீஸ்வரம் ஸ்ரீ உத்பலவர்ணன் ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து வழிபாடு செய்ய இருக்கிறார். விபரங்களுக்கு +94 (74) 045 0906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இறைஅடியார்கள் சுவாமிகளை தரிசனம் செய்து ஆசி பெற முடியுமென்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.