– தாமதமான பணிகளை வார இறுதிக்குள் முடிக்க முயற்சி
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலையீட்டின் பேரில், சுகயீன விடுமுறை அறிக்கை மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சுங்க ஒன்றிய சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சுங்க நடவடிக்கைகளையும் வழமை போன்று முன்னெடுக்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகம் அனைத்து அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைவாக தற்போது, தொழிற்சங்க நடவடிக்கையின் போது தாமதமான பணிகளை வார இறுதிக்குள் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று (03) மற்றும் இன்று (04) ‘சுகயீன விடுமுறை’யை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தன.
அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களின் கோரிக்கைகளுக்கு தேவையான தீர்வுகள் எதுவும் கிடைக்காததால் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.