– JCB இனால் மூடப்பட்ட கிராமத்தின் பாழடைந்த கிணற்றை தோண்ட நீதிமன்றம் அனுமதி
சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
25 வயதான நடேஸ்குமார் வினோதினி என்ற இளம் பெண் ஒருவரே காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையை முன்னெடுத்துவரும் மூதூர் பொலிசார் சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப் புறத்தில் பாழடைந்து இருக்கின்ற கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்று (03) முதல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கிணறானது நாளை (5) காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாகவும் மூதூர் பொலிசார் தெரிவித்தனர்.
சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான நடேஸ்குமார் வினோதினி என்ற குறித்த யுவதியும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான உதயகுமார் விஷ்னுகாந்த் என்ற இளைஞனும் காதலித்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில் கடந்த மே மாதம் குறித்த யுவதி காதலனுடன் மட்டக்களப்பிற்கு சென்று வசித்து வந்ததாகவும் மே மாதம் 31ஆம் திகதி மாலை அழுது கதைத்த குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்ததாகவும் அன்றையதினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததாகவும் இதன்போது வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்ததாகவும் அதன் பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போயிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து குறித்த காதலனின் இலக்கத்திற்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும் யூன் மாதம் 13ஆம் திகதி அழைப்பை எடுத்து தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்க கொடுப்பதாகவும் குறித்த யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாகவும் தெரிய வருகின்றது. இதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் யூலை மாதம் 1ஆம் திகதி முறைப்பாடு செய்ததாகவும் யுவதியின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கொலை செய்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த கிணறானது ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு குறித்த காதலனினால் மூடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.