T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வென்று சாம்பியனான இந்திய அணி வீரர்கள், தனி விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர்.
பார்படாஸில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக 3 நாட்களாக ஹோட்டலிலேயே முகாமிட்டிருந்த இந்திய வீரர்கள், எப்போது இந்தியாவுக்கு வருவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இதில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கிண்ணம் வென்று சாதனை படைத்தது.
இதன்பின் உடனடியாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி வீரர்களுக்கு ஜூலை 1ஆம் திகதி தான் விமான டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஒருநாள் ஹோட்டலில் தங்கியிருந்த இந்திய அணி வீரர்கள், அடுத்த நாள் புறப்பட தயாராகி வந்தனர். ஆனால் எதிர்பார்க்காத விதமாக பார்படாஸில் புயல் மற்றும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டது.
இதனால் 2 நாட்களாக இந்திய அணி வீரர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இதனால் இந்திய அணி நாடு திரும்புவது எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இதன்பின் BCCI தரப்பில் இந்திய அணி வீரர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
“AIC24WC” என்று பெயரிடப்பட்ட விமானம் இந்திய வீரர்களுக்காக தயார் செய்யப்பட்டது. இந்திய விமானத்தில் இந்திய அணி வீரர்கள், குடும்பத்தினர், நிர்வாகிகள் மட்டுமல்லாமல் இந்திய பத்திரிகையாளர்களையும் அழைத்து வருவோம் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புயல் ஓய்ந்த நிலையில் பார்படாஸ் விமான நிலையத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் விமானம் ஏறியுள்ளனர்.
இந்த விமானம் நாளை (04) காலை 6.00 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று தெரிய வந்துள்ளது. அதன்பின் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து மும்பை வரும் இந்திய வீரர்கள், திறந்தவெளி பஸ்ஸில் T20 உலகக் கிண்ணத்துடன்வலம்வருவார்கள் என்று தெரிய வந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் T20 உலகக் கிண்ணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.