Monday, July 22, 2024
Home » கடும் மோதலுக்கு மத்தியில் காசாவெங்கும் இஸ்ரேலியப் படை தொடர்ந்து குண்டு மழை

கடும் மோதலுக்கு மத்தியில் காசாவெங்கும் இஸ்ரேலியப் படை தொடர்ந்து குண்டு மழை

ரபா நகரை முழுமையாக கைப்பற்ற முழு வீச்சில் தாக்குதல்

by mahesh
June 22, 2024 2:02 pm 0 comment

காசாவின் தெற்கு நகரான ரபா மற்றும் ஏனைய பகுதிகள் மீது இஸ்ரேலியப் படை நேற்றும் கடுமையான தாக்குதல்களை நடத்தியதோடு பலஸ்தீன போராளிகளுடன் சண்டையிட்டு வந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதில் எகிப்து எல்லையை ஒட்டிய காசாவின் தென் முனையில் இருக்கும் ரபாவை கைப்பற்றும் தனது படை நடவடிக்கையை பூர்த்தி செய்யும் முயற்சியில் இஸ்ரேலியப் படை ஈடுபட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருந்து வந்த ரபா மீது சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் கடந்த மே ஆரம்பத்தில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.

நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டாங்கிகள் முன்னேறி வருவதோடு இஸ்ரேலியப் படை ஏற்கனவே கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. வான், தரை மற்றும் கடற்கரைக்கு அப்பால் போர் கப்பல்கள் மூலம் சரமாரித் தாக்குதல்களை நடத்தும் நிலையில் இங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். காசாவின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களால் இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரபாவில் அடைக்கலம் பெற்றிருந்தனர்.

இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரபாவில் உளவுத் தகவல் அடிப்படையிலான துல்லியமான படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. போராளிகள் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளுக்கு அருகில் துருப்பினர் சண்டையிட்டு வருவதாகவும் அது கூறியது.

கடந்த இரண்டு தினங்களாக இஸ்ரேலிய சுற்றிவளைப்புகள் அதிகரித்திப்பதாக ரபா குடியிருப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்களை கேட்கும்போது இடைவிடாது உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருவது தெரிகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘கடந்த இரவு மேற்கு ரபாவில் மோசமான இரவாக இருந்தது. ஆளில்லா விமானங்கள், விமானங்கள், டங்கிகள் மற்றும் கடற்படை படகுகள் இங்கு குண்டுகளை வீசின. ஆக்கிரமிப்பாளர்கள் நகரை முழுமையாக கட்டுப்படுத்த முயல்கிறார்கள் என்று நாம் உணர்கிறோம்’ என 45 வயதான ஹாதம் குறுஞ்செய்தி வழியாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘எதிர்ப்புப் போராளிகளிடம் இருந்து அவர்கள் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அது அவர்களின் முன்னேற்றத்தை மெதுவடையச் செய்துள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எட்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் இஸ்ரேலிய படையினர் காசாவில் இன்னும் நுழையாத இரு பகுதிகளான ரபாவின் தென் முனை மற்றும் மத்திய காசாவில் டெயிர் அல் பலாஹ்வை சூழவுள்ள பகுதிகளில் அதிக அவதானம் வெலுத்தி வருகின்றனர்.

‘ரபாவின் ஒட்டுமொத்த நகரும் இஸ்ரேலிய படை நடவடிக்கை இடம்பெறும் பகுதியாக உள்ளது’ என்று ரபா மேயரான அஹமது அல் சோபி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த நகரம் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதோடு இஸ்ரேலிய குண்டு வீச்சுகளால் மக்கள் தாம் தமது கூடாரங்களிலேயே கொல்லப்பட்டு வருகின்றனர்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நகரில் மருத்துவ வசதிகள் இயங்கவில்லை என்று குறிப்பிட்ட சோபி, எஞ்சியுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தமது நாளாந்த குறைந்தபட்ச உணவு மற்றும் நீருக்கும் பற்றாக்குறை நீடிப்பதாக குறிப்பிட்டார்.

ரபா நகரின் தூர மேற்குப் பக்கமாக 100,000க்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து வசித்து வருவதாக பலஸ்தீனர்கள் மற்றும் ஐ.நா. தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மே ஆரம்பத்தில் இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் ரபா நகரிலேயே அடைக்கலம் பெற்றிருந்தனர்.

ரபாவில் உள்ள ஷபூரா முகாமில் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகளைக் கொண்டு இரு இஸ்ரேலிய டாங்கிகளை தாக்கியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு கடந்த வியாழக்கிழமை கூறியது. இங்கிருந்து தப்ப முயன்ற இஸ்ரேலியப் படை வீரர் ஒருவரையும் கொன்றதாக அது கூறியது. இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அருகிலுள்ள கான் யூனிஸ் நகரில் நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குதலில் தந்தை மற்றும் மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம் வடக்கில் உள்ள காசா நகரின் சில புறநகர் பகுதிகளில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இங்கு ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டை நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா நகரின் மையப் பகுதியில் இருக்கும் பல வீடுகளையும் இஸ்ரேலியப் படை அழித்ததாக குடியிப்பாளர்கள் தெரிவித்தனர்.

காசா நகரின் மாநகர வசதி மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் நான்கு மாநகர பணியாளர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக காசா சிவில் அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இங்கு இடிபாடுகளில் உயிர் தப்பியவர்களை மீட்பாளர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,500ஐ நெருங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT