Saturday, July 20, 2024
Home » மேற்கிந்திய தீவுகளிடம் இலங்கை மகளிர் சாதனை வெற்றி: தொடரையும் முழுமையாக கைப்பற்றியது

மேற்கிந்திய தீவுகளிடம் இலங்கை மகளிர் சாதனை வெற்றி: தொடரையும் முழுமையாக கைப்பற்றியது

by mahesh
June 22, 2024 2:05 pm 0 comment

மேற்கிந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 160 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றியது.

இது இலங்கை மகளிர் அணி ஒருநாள் சர்வதேச போட்டியில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவும் இருந்தது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக 155 ஓட்டங்களால் வெற்றியீட்டிய சாதனையை இது முறியடித்தது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை மகளிர் அணிக்கு அணித் தலைவி சமரி அத்தப்பத்து சிறப்பாக செயற்பட்டு 106 பந்துகளில் 91 ஓட்டங்களை பெற்றதோடு ஆரம்ப விக்கெட்டுக்காக விஷ்மி குணரத்னவுடன் (44) சேர்ந்து 93 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

இலங்கை மகளிர் அணி விரைவாக 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் மத்திய வரிசையில் ஜோடி சேர்ந்த நிலக்ஷிகா சில்வா (63) மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி (55) 5 ஆவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 34.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஆரம்ப வீராங்கனை சதீன் நட்டியோன் பெற்ற 46 ஓட்டங்கள் அதிகபட்சமாகும்.

அபாரமாக பந்து வீசிய இடது கை சுழற்பந்து வீராங்கனை சச்சினி நிசன்சலா 5.5 ஓவர்களில் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT