Saturday, July 13, 2024
Home » இந்தியா, ஆஸி. ‘சுப்பர் 8’ சுற்றிலும் வெற்றி ஆரம்பம்

இந்தியா, ஆஸி. ‘சுப்பர் 8’ சுற்றிலும் வெற்றி ஆரம்பம்

by mahesh
June 22, 2024 2:03 pm 0 comment

டி20 உலகக் கிண்ணத்தில் குழு 1 இற்கான சுப்பர் 8 போட்டிகளில் பலம்மிக்க இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டன.

அன்டிகுவாவில் இலங்கை நேரப்படி நேற்று (21) நடைபெற்ற போட்டியில் பட் கம்மின்ஸின் ஹட்ரிக் விக்கெட் மூலம் ஆஸி. அணி 28 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை டக்வர்த் லுவிஸ் முறையில் வீழ்த்தியது.

பங்களாதேஷ் அணியை 8 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய அவுஸ்ரேலிய அணி டேவிட் வோனர் 35 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புகளுக்கு 100 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது உலகக் கிண்ணத்தில் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது ஆஸி. வீரராக கம்மின்ஸ் பதிவானார். இதற்கு முன் 2007 இல் பங்களாதேஷுக்கு எதிரான பிரெட் லீ ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இதன்போது 18 ஆவது ஓவரின் கடைசி இரு பந்துகளிலும் மஹ்மூதுல்லா மற்றும் மஹதி ஹசனின் விக்கெட்டை வீழ்த்திய கமின்ஸ் 20 ஆவது ஓவரின் முதல் பந்தில் தவ்ஹீத் ஹிரிதோயின் விக்கெட்டை பதம்பார்த்தார்.

இதேவேளை பார்படோஸில் தனது முதல் சுப்பர் 8 சுற்றில் ஆப்கான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 47 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய அணி சுரிய குமார் யாதவ் 28 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாச 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.

பதிலெடுத்தாடிய ஆப்கான் அணி 20 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT