Saturday, July 13, 2024
Home » சர்வதேச யோகா தினம் நேற்று உலகநாடுகளில் அனுஷ்டிப்பு

சர்வதேச யோகா தினம் நேற்று உலகநாடுகளில் அனுஷ்டிப்பு

by mahesh
June 22, 2024 2:00 pm 0 comment

சர்வதேச 10 ஆவது யோகா தின நிகழ்ச்சிகள் நேற்றுக் காலை உலகநாடுகள் பலவற்றில் நடைபெற்றன. இந்தியாவில் யோகா தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், இராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன் கூடிய இந்தப் பிரகடனம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி 10 ஆவது சர்வதேச யோகா தினம் இம்முறை கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்றுக்காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன. டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பிஎல் வர்மா, இராணுவ தளபதி உபேந்திரா திவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி உள்ளிட்டோர் யோகா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

லடாக்கின் லே பகுதியில் இராணுவ வீரர்கள் நேற்றுக்காலை யோகா நிகழ்வுகளில் பங்கேற்றனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் யோகா நிகழ்வுகள் நடைபெற்றன. மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்திலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆர்வமிக்க மற்றும் துடிப்பான இளைஞர்களுடன் சேர்ந்து முழு ஆரோக்கியம் மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கான யோகா பயிற்சி செய்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஶ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று யோகாசனங்களை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT