Saturday, July 13, 2024
Home » அஷ் ஷெய்க் முஸ்தபா நாயகம் (றஹ்) ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு

அஷ் ஷெய்க் முஸ்தபா நாயகம் (றஹ்) ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு

by mahesh
June 22, 2024 1:59 pm 0 comment

ஆன்மீக ஞானியும் காதிரியதுன் நபவீய்யா தரீக்காவின் ஸ்தாபகருமான சங்கைக்குரிய அஷ் ஷெய்க் முஸ்தபா நாயகம் (றஹ்) அவர்களின் ஞாபகார்த்த தினம் இத்தரீக்காவைப்பின்பற்றும் நாட்டிலுள்ள 18 ஊர்களில் இன்று 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அரபு – தமிழ் யுக புருஷர் என்று போற்றப்படும் அவரது ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் மஜ்லிஸ் இன்று 22 ஆம் திகதி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புகாரித் தக்கியாவில் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறுகிறது.

காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் அல் ஆலிமுல் பாழிழ் வஷ் செய்ஹூ காமில் சங்கைக்குரிய நாயகம் அஷ் ஷெய்க் அஹமத் பின் முஹம்மத் ஆலிம் காதிரியதுன் நபவி இந்த மஜ்லிஸூக்கு தலைமை வகிப்பார்.

பேருவளை நகரில் மூத்த குடியில் ஆதம் மரைக்காரின் புதல்வரான சங்கைக்குரிய மாகாண் சேகு முஸ்தபா வலியுல்லாஹ் பிறந்தார். அன்னார் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் அரபு இலக்கண, இலக்கிய, பிக்ஹூ சட்டதிட்டங்கள் போன்ற இஸ்லாமிய மத அறிவியல் துறையில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். இந்தியாவில் உள்ள காயல் பட்டணத்தில் இத்துறையில அறிவு பெற்று நாடு திரும்பி பேருவளை மாளிகாசேனை பைத்துல் முபாரக் முஸ்தபவியா புகாரித் தக்கியாவை தனது தலைமை ஸ்தானமாகவும், ஆய்வுகூடமாகவும் அமைத்து இஸ்லாமிய பணிபுரியும் காலத்தில் சங்கைக்குரிய முபாரக் மௌலானா என்ற பெரியாரின் சகவாசம் கிடைத்தது.

சங்கைக்குறிய செய்கு முஸ்தபா (றஹ்) அவர்களின் சேவைக்கு இவர்கள் துணை புரிந்து சிறிது காலத்தில் முபாரக் மௌலானா தென்னிலங்கையில் காலி நகரில் இறையடி சேரவே தென் அரேபியர் யெமன் நாட்டைச் சேர்ந்த அஹ்தலி மௌலானா அவர்களின் சகவாசம் கிடைத்து பேருவளை மாளிகாச்சேனை புஹாரித் தக்கியாவில் புஹாரி மஜ்லிஸ் ஆரம்பம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

சேகு முஸ்தபா (றஹ்) அவர்கள் மெய்ஞானியாகவும் புலவராகவும் திகழ்ந்தார். அன்னவரினால் இயற்றப்பட்ட மீசான் மாலை அரபுத்தமிழ் கவிதை புகழ் பெற்றதாகவுள்ளது. அவர் பல இஸ்லாமிய பத்வா நூல்கள், இஸ்லாமிய சட்ட திட்டங்கள், முனாஜாத்துக்கள் போன்றவற்றை அரபியிலும், அரபுத்தமிழிலும் வெளியிட்டார்கள். அஹ்காமுல் இகம் என்ற பெயரில் அரபுத் தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவி அதன் மூலம் அபுத் தமிழில் பல ஆக்கங்களை வெளியிட்டார்.

அவர் ஹஜ் கடமைக்காக புனித மக்கா சென்ற போது மக்காவில் காலமாகி அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டார். மக்கா மதீனா போன்ற முஸ்லிம் நாடுகளில் சேகு முஸ்தபா (றஹ்) அவர்களின் சன்மார்க்க அறிவுத் திறன் பலராலும் புகழப்பட்டது.

அன்னாரின் ஞாபகர்த்தமாக ஒவ்வவொரு வருடமும் பேருவளை மாளிகாசேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புகாரித்தக்கியாவில் கத்தமுல் குர்ஆன் மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.

பேருவளை பீ.எம்.முக்தார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT