Sunday, July 14, 2024
Home » சட்டவிரோத மதுபானம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டியது!

சட்டவிரோத மதுபானம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டியது!

கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளால் தமிழகம் எங்கும் சோகமயம்!

by mahesh
June 22, 2024 1:58 pm 0 comment

தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் மெதனோல் கலந்த சட்டவிரோத மதுபானத்தை அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 50 ஐயும் தாண்டி விட்டது. மரணங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. சட்டவிரோத மதுபானத்தை அருந்தியவர்களில் மேலும் 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவத்தினால் கள்ளக்குறிச்சி நகராட்சி பிரதேசம் முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

சட்டவிரோத மதுபான பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் தமிழக மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் கள்ளக்குறிச்சிக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்தவண்ணமுள்ளன.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது கருணாபுரம் பகுதி. கள்ளக்குறிச்சி நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி பொலிஸ் நிலையம், மற்றும் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையம் ஆகிய முக்கிய அலுவலகங்கள் இப்பகுதிக்கு 100 மீட்டர் அருகில்தான் உள்ளன. இந்தப் பிரதான அலுவலங்களைத் தாண்டித்தான் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

50 இற்றும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதால் தெருவெங்கும் அழுகுரல்கள் கேட்கின்றன. அருகருகே போடப்பட்டிருந்த பந்தல்கள், வாசலிலேயே பிரேதபெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள். அவற்றைச் சுற்றி நின்று அழும் உறவினர்கள் ஒருபுறமும், துக்கம் விசாரிக்க வருபவர்கள் ஒருபுறமுமாக கள்ளக்குறிச்சி பிரதேசம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

சிலர் எந்த வீட்டிற்குச் செல்வது, எத்தனை மாலைகள் வாங்கிச் செல்வது என்று திண்டாடுவதையும் காண முடிகின்றது.

கருணாபுரம் பகுதியில் தந்தை, தாய் இருவருமே மரணமடைந்துள்ளதால் அவர்களது பிள்ளைகள் அநாதரவாகியுள்ளனர்.

பறையொலி சத்தங்களை விட அழுகுரல் சத்தம்தான் அதிகமாக கேட்கின்றது. மாவட்டம் முழுவதும் கேட்கும் மரண ஓலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டவிரோத மதுபானத்தை அருந்தியவுடன் வயிற்றுப்போக்கு, கை, கால் மரத்துப் போதல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் குவிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு அதீத பாதிப்பு இருப்பது மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையின் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். உயிரிழந்த 50 இற்கும் மேற்பட்டோரைத் தவிர, 70 இற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சிச் கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இங்குதான் அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயம் வாக்கி குடித்து இருக்கிறார்கள்.

மொத்தமாக 109 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் இறுதிச் சடங்குக்கு சென்ற இடத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதையும் சிலர் வாங்கி குடித்திருக்கிறார்கள். உடனேயே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை பொலிஸார் நடத்திய சோதனையில் 1100 லீட்டர் சட்டவிரோத மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10 இற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு பொலிஸ்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமுலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி, கள்ளக்குறிச்சி பொலிஸ் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், பொலிஸ் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெதனோல் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது. மெதனோல் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது பொலிஸ்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT