Saturday, July 13, 2024
Home » இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம்

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம்

- அகில இந்திய பங்காளித்துவக் கூட்ட 2024 இல் ஜனாதிபதி தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
June 22, 2024 4:18 pm 0 comment
  • வலுசக்தித் துறை சார்ந்து இலங்கைக்கும் இடையில் செயற்படுத்தப்படும் கூட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கையளிக்கப்படும்
  • 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற 31 ஆவது ‘அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் – 2024’, இந்தியாவின் KPMG மற்றும் இலங்கையின் KPMG ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட இந்திய பங்காளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Yezdi Nagporawalla மற்றும் KPMG இலங்கை முகாமையாளர் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

‘’இலங்கையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவையும் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம். அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்துநி லையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம்.

மேலும், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பல பரிமாண வறுமையைக் குறைப்பதற்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இலங்கை என்று நான் நம்புகிறேன்.

ஒரு அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தவுடன், அடுத்து வரும் அரசாங்கம் நிச்சயமாக அந்தக் கொள்கையை மாற்றியமைக்கின்றது. அப்போது நாம் ஒரு நாடாக முன்னேற முடியாது. நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்ற சட்ட மூலம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. நாங்கள் தயாரித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, முதலீட்டு சபையின் செயல்பாடுகளுடன் முழுமையான முதலீட்டு செயல்முறையையும் நிர்வகிக்கும் பொருளாதார ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனங்களும் இந்த சட்டத்தின் மூலம் நிறுவ எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு வலயங்களை முகாமைத்துவம் செய்ய ஒரு தனியான முகவர் நிறுவனம், நமது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம், உற்பத்தித் திறன் மேம்பாட்டை உறுதி செய்ய தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இது தொடர்பாக மேலும் கலந்துரையாட இலங்கைக்கு வருகை தந்தார்.

எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும். அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தத் திட்டம் எங்கள் வலுசக்திக் கூட்டாண்மைக்கு அடிப்படையாக அமைவதோடு, மேலும் காற்றாலை மற்றும் சூரிய சக்திக்கான பாக்கு நீரிணையை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இரு நாடுகளும் ஒன்றிணைந்து சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான பாரிய அளவிலான மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக, யாழ் குடாநாட்டின் பிரதான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து, இந்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் நாம் விரிவாகக் கலந்துரையாடினோம். திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தில் கைத்தொழில்களுக்கான முதலீட்டு வலயங்களும் உள்ளடங்கும். அதேபோன்று சுற்றுலாப் வலயத்தையும் கொண்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான இறுதி கண்காணிப்பு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

மேலும், திருகோணமலையை எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாற்ற எதிர்பார்ப்பதுடன், துறைமுகங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவில் ஒரு பிரதான துறைமுகமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, முழு கிழக்கு கடற்கரையும் சுற்றுலாத்துறைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் தெற்கு பிரதேசங்களில் ஹோட்டல்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி யெஸ்டி நாக்போரேவெல்லா,

‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை மக்களின் நலனுக்கான இடைவிடாத அர்ப்பணிப்பும் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும். சிறந்த தலைமைத்துவம் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துள்ளதை நாம் கண்டோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகள் இலங்கை மக்களிடம் மட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இலங்கை நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.’’ என்று அவர் தெரிவித்தார்.

KPMG குளோபல் நெட்வேக்கின் ஏனைய உறுப்பு நிறுவனங்களின் பல பங்காளர்களும், முன்னணி இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT