Saturday, July 13, 2024
Home » காசாவின் ரபா நகருக்குள் உயிர் சேதங்களுடன் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: எண்மர் பலி

காசாவின் ரபா நகருக்குள் உயிர் சேதங்களுடன் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: எண்மர் பலி

by mahesh
June 21, 2024 11:09 am 0 comment

இஸ்ரேலிய டாங்கிகள் கடுமையான வான் தாக்குதல்களின் உதவியோடு தெற்கு காசாவில் ரபா நகரின் மேற்குப் பக்கமாக ஆழ ஊடுவி வருவதோடு இந்தத் தாக்குதல்களில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை (19) நள்ளிரவுக்குப் பின்னர் ஐந்து சுற்றுப்புறங்களுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்காக கடற்கரைப் பகுதியான அல் மாவாசியில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மீது கடும் செல் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரபாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான மோதல் இடம்பெற்று வருவதாகவும் இங்கு இஸ்ரேலிய தரைப் படை மற்றும் டாங்கிகள் பல நாட்களாக உக்கிர தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் அதிக சன நெரிசல் மிக்க அல் ஷுபுரா அகதி முகாமில் இதுவரை இல்லாத அளவில் மோதல் உக்கிரமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி காசாவில் உள்ள பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருந்து வந்த நிலையிலேயே சர்வதேச எச்சரிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் அங்கு படை நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.

இந்த நகரில் தொடர்ந்தும் 65,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

‘தற்போது ரபாவில் 65,000க்கும் மேற்பட்டோர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆறு வாரத்திற்கு முன்னர் இருந்ததில் இருந்து முற்றாக மாறுபட்ட நிலையாகும். இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவு மற்றும் படை நடவடிக்கைக்கு முன்னர் அப்போது அங்கு 1.4 மில்லியன் இடம்பெயர்ந்த மக்கள் இருந்தனர்’ என்று ஐ.நா. செயலாளர் நாயத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.

மோதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் நேற்றுக் காலை சரமாரி வான் தாக்குதல்கள் இடம்பெற்றதோடு அங்குள்ள ஜதல்லா குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டு மேலும் 12 பேர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

மேலும் வடக்காக காசா நகரில் உள்ள செய்தூன் பகுதிக்கு இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்திருப்பதோடு டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் கடும் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ஹமாஸ் போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரின் மற்றொரு புறநகர் பகுதியான ஷெய்க் ரத்வானில் வீடொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதப் பிரிவு மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி இஸ்ரேலிய படையுடன் சண்டையிட்டு வருவதோடு சில இடங்களில் முன்கூட்டியே வெடிபொருட்களை புதைத்து வைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசா போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,400ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எட்டு மாதங்கள் தாண்டி நீடித்து வரும் இந்தப் போர் தணிவதற்கான சமிக்ஞைகள் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆதரவிலான சர்வதேச மத்தியஸ்தர்களின் போர் நிறுத்த முயற்சிகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பை இணங்கச் செய்ய தவறி வருகிறது.

காசா பகுதியை சின்னாபின்னமாக்கி அந்த நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலியப் படை கைப்பற்றியபோதும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் அதன் பிரதான இலக்கை வெற்றி பெறத் தவறி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT