டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றை ஆரம்பித்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியை நடத்தும் முறையே மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தின.
செயின்ட் லூசியாவில் இலங்கை நேரப்படி நேற்று (20) நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளை 8 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்தியது.
சுப்பர் 8 சுற்றில் குழு இரண்டுக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. குறிப்பாக அணித்தலைவர் ரோமன் பவல் 17 பந்துளில் 5 சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர் பில் சோல்ட் 47 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை விளாசி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியமை குறிப்பிடத்தக்கது. மத்திய வரிசையில் ஜொன்னி பெஸ்டோ 26 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிக்காது 48 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடைபெற்ற சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் முதல் முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கி சிறப்பாக செயற்பட்டு வரும் அமெரிக்க அணி தென்னாபிரிக்காவுக்கு கடுமையாக சவால் கொடுத்தபோதும் அந்த அணி 18 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
அன்டிகுவாவில் குழு 2 இற்காக நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக் 40 பந்துகளில் 74 ஓட்டங்களை விளாசினார்.
பதிலெடுத்தாடிய அமெரிக்க அணி 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் 6 ஆவது விக்கெட்டுக்கு அன்ட்ரீஸ் குயிஸ் மற்றும் ஹார்மீத் சிங் 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இதன்மூலம் அமெரிக்க அணி கடைசி 12 பந்துகளுக்கும் 28 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. எனினும் பந்துவீச வந்த ககிசோ ரபாட முதல் பந்தில் ஹார்மீத்தின் (38) விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் 2 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் கை ஓங்கியது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களையே பெற்றது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய குயிஸ் 47 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றார்.