Saturday, July 20, 2024
Home » மருந்து, எரிபொருள், உரம் இன்றி துன்பப்பட்ட காலத்தை யாரும் மறக்கக் கூடாது!

மருந்து, எரிபொருள், உரம் இன்றி துன்பப்பட்ட காலத்தை யாரும் மறக்கக் கூடாது!

- தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்க வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி

by Rizwan Segu Mohideen
June 21, 2024 2:34 pm 0 comment

– இவ்வருட பட்ஜெட்டில் இலவச சுகாதார சேவைக்கு வரலாற்றில் மிகப்பெரிய தொகை: ரமேஷ் பத்திரண
– ஜனாதிபதி செய்த பொருளாதார அதிசயத்திற்கு உலகளாவிய அங்கீகாரம்: ராஜித சேனாரத்ன

கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது தப்பித்து ஓடாமல் அதனை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்று (20) பிற்பகல் பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது தப்பித்து ஓடாமல் அதனை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஜனாதிபதி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2015 புதிய மருந்துகள் சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது. நாட்டில் மருந்து விலையை கட்டுப்படுத்தல், மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்குதல், அரசின் சிறுநீரக நிதி, சுகாதார நிதியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு இந்தச் சங்கம் பங்களித்துள்ளது.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கி வைத்தார்.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“கடந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை வழங்கிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்திற்கு அரசின் சார்பில் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு அரச நிறுவனங்கள் வீழ்ந்து கொண்டிருந்தபோது நீங்கள் முன்வந்து உங்களது பொறுப்பை நிறைவேற்றினீர்கள்.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து உங்களின் சங்கம் அளித்துள்ள அறிவிப்பின்படி, அவை குறித்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இந்த நாட்டில் பலர் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு உங்கள் முயற்சிதான் காரணம் என்று கூற வேண்டும். கடந்த காலங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளைப் பெற பணம் இருக்கவில்லை.

ஆனால் அந்த கடினமான நேரத்தில் நீங்கள் தப்பி ஓடவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள். அதைத்தான் நம் நாட்டில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறுவதில்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று உங்களுக்கோ எனக்கோ தெரியாது. நாம் அனைவரும் எங்களால் இயன்றவரை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது. நாட்டில் அந்நியச் செலாவணி இல்லை. தேவையான மருந்துகள், எரிபொருள் கொண்டு வர பணம் இல்லை. கிடைக்கும் பணத்தை எரிபொருளுக்கு வழங்குவதா அல்லது உரத்திற்கு வழங்குவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் நாம் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை ஆரம்பித்தோம்.

அதன் ஊடாக உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு மருந்து மற்றும் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அத்தகைய கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வந்தோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தால், இந்தியாவிலிருந்து மருந்துகளைப் பெற முடிந்தது. மேலும், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட பணத்தால், உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது.

எவ்வாறாயினும், ஒரு நாடாக நாம் முதல் 6 மாதங்களை மிகவும் சிரமத்துடன் கடந்தோம். அதன் பிறகு நாடு படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மக்கள் உங்களிடம் வந்து பணம் இல்லாமல் மருந்துகளைக் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்களுக்கு மருந்துகளை கொடுக்காமல் சாகச் சொல்வதா, நட்டத்தை அனுபவித்து மருந்து கொடுப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியேற்பட்டது.

நாம் அனைவரும் அந்தக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நாம் அனைவரும் சிரமப்பட்டு அந்த முடிவுகளை எடுத்ததால்தான் நாம் ஒரு நாடாக முன்னோக்கி வருகிறோம். மேலும் VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளால் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது.

கடந்த வாரம், IMF பணிப்பாளர்கள் குழுவின் இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நடத்தினோம். இலங்கையை வழிநடத்தும் திட்டம் சரியானது என்று அதன்போது சான்று கிடைத்துள்ளது. அதன்படி கடனைச் செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பணியை நிறைவுசெய்வது குறித்து தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருகிறோம்.

மேலும், பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்கிய தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்டவும் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாடு விழுந்த பாதாளத்தில் இருந்து இப்போது மீண்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் பயணம் முடிவதில்லை. ஆனால் ஒரு நாடாக நாம் ஏன் படுகுழியில் விழுந்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நாட்டில் ஏற்றுமதித் தொழிலை நாங்கள் உருவாக்கவில்லை. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நாங்கள் அனைத்தையும் தவறவிட்டோம். 1979 இல் நான் சீனாவுக்குச் சென்றபோது, சீனா நம்மைவிட ஏழ்மையான நாடாக இருந்தது. இப்போது சீனா நமக்குப் பணம் தருகிறது. 1991 இல் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் என்னைச் சந்தித்தார்.

உங்களுக்கு எப்படி முதலீடுகள் வந்தன, எப்படி அன்னியச் செலாவணி கிடைத்தது, வர்த்தக வலயங்களை எப்படி உருவாக்கினீர்கள் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார். எனது அறிவுரைகளை அவர் கவனித்தார். ஆனால் இப்போது நான் வியட்நாம் சென்றால் அவரிடம் இதுபற்றிக் கேட்கவேண்டி உள்ளது.
கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டோம். இதைச் சரிசெய்து புதிய பொருளாதாரத்தை நோக்கிச் செல்லாவிட்டால் மீண்டும் ஒரு நாடு என்ற வகையில் பாதாளத்தில் விழுவோம். அந்த இருண்ட யுகத்திற்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டுமா? இப்போது நாட்டுக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். பழைய முறையை விட்டுவிட்டு புதிய அமைப்பைக் கொண்டு முன்னேற வேண்டும்.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் முன்னேற்றத்துடன் நாமும் முன்னேற வேண்டும். போட்டி நிறைந்த பொருளாதாரத்திற்கு நாம் திரும்ப வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அங்கு பயன்படுத்தப்பட வேண்டும். புதிதாக சிந்தித்து புதிய நாட்டை உருவாக்குவோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண,

இலங்கை சுகாதாரத் துறையின் தரத்தைப் பேணுவதில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பங்களிப்பைப் பாராட்டுவதற்கு நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். குறிப்பாக இந்நாட்டில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும், மருந்துப் பற்றாக்குறையின்றி நாட்டைப் பேணுவதற்கும் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதை நான் நினைவுகூருகிறேன்.

இந்நாட்டு மக்களின் ஆரோக்கியமானது, சுகாதாரத் துறையின் அனைத்து அம்சங்களிலும் சார்ந்துள்ளது. உலகத்துடன் ஒப்பிடும்போது, நமது நாடு சிறந்த சுகாதார சேவையை கொண்டுள்ளது. இந்நாட்டில் நோயாளிகளின் நல்வாழ்வுக்காக, நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். மேலும், புனர்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு ஒரு நாடாக முன்னேறுவதற்கான சவாலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம்.

சுதந்திர இலங்கையில் வைத்தியசாலைகள், வைத்தியர்கள், தாதியர்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்துள்ளனர். பௌதீக வசதிகள் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இலவச சுகாதாரத்தை பாதுகாக்க வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உங்கள் ஆதரவுடன் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.’’ என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன,
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் என்பது, தாம் நட்டம் அடைந்தேனும் நாட்டுக்கு இலாபம் ஈட்டித் தருவதற்காக செயற்பட்ட சங்கமாகும்.. கடந்த இக்கட்டான காலகட்டத்தில் இலாபம் பாராமல் சேவை வழங்கினர். அதைத்தான் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்து வருகிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நாமும் நினைக்கவில்லை. கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் முடிந்தவர் என்றால், நம் நாட்டை அவர் இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொள்கிறது, உலகமே பாராட்டுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டிருப்பது பொருளாதார அதிசயம் என உலக நாடுகள் கூறுகின்றன. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வளவு சீக்கிரம் மீட்டெடுத்த நாட்டை நாங்கள் பார்த்ததில்லை என்கிறார்கள். எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பணிகளின்போது, இலங்கையின் விக்ரமசிங்கவை பார்க்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் நம் நாட்டு மக்கள் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் இந்த உண்மை நிலையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்த

இரண்டு வருடங்களுக்கு முன் இந்நாட்டின் நிலைமை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அப்போது மருந்தகங்களைத் திறந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கப் பாடுபட்டோம். அப்போது, மருந்தகங்கள் முன்பு கிலோமீட்டருக்கு மேற்பட்ட நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால் மருந்து வாங்க பணம் இருக்கவில்லை. உயிர்பிழைக்க மருந்து இல்லாத காலம் ஒன்று இருந்தது. இவ்வாறானதொரு காலகட்டத்தில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றார்.

குடும்பத்தில் உறுப்பினர்கள் மூன்று பேர் இருந்தால் மூன்று வரிசைகளில் அவர்கள் இருந்தனர். மருந்துகளை விநியோகிக்க எரிபொருள் இருக்கவில்லை. இவ்வாறானதொரு யுகத்தை முடிவுக்கு கொண்டு வர, அதிஷ்டவசமாக ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றிருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். இல்லை என்றால் பாண் ஒன்றுக்காகக்கூட கொலைகள் இடம்பெறும் யுகத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கும் இவ்வேளையில், இன்று இவ்வாறாக எமது தொழில்துறையைப் பாதுகாக்க ஆதரவு வழங்கியமைக்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்தார்.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசகர், வண. குப்பியவத்தை போதானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருந்து இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT