Saturday, July 13, 2024
Home » சைவமங்கையர் கழகத்தில் இன்று புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

சைவமங்கையர் கழகத்தில் இன்று புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

இன்றைய காலத்திற்கும், இளைய தலைமுறைக்கும் தேவையானதொரு கூட்டுச் சமூகப் பங்களிப்பு என்கின்றார் ஏற்பாட்டாளர் எம். பௌசர்

by mahesh
June 21, 2024 8:58 am 0 comment

நாங்கள் ஜுன் மாதம் (21,22,23) கொழும்பில் ஏற்பாடு செய்கின்ற புத்தகக் கண்காட்சி புத்தகங்கள், வாசிப்பு, எழுத்து, பரவலாக்கம் என்கின்ற ஒரு நீண்டகால செயல்திட்டமாகும். பாடசாலை மட்டத்தில் இருந்து வாசிப்பின் மீதான ஆர்வத்தினையும் ஈடுபாட்டினையும் ஏற்படுத்துவதற்கான அடிப்படைச் சூழலை படிப்படியாக கட்டியெழுப்புவதே எமது நோக்காகும். மாணவர்கள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக சக்திகள் என அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும்.

எங்கள் இந்த செயல்திட்டம் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளோரின் ஆதரவில்தான் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம், தென்னிலங்கைப் பிரதேசங்கள் என்பன இதன் செயற்பாட்டுத் தளமாகும். இப்பிரதேசங்கள் இந்த எமது செயற்திட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான தேவையையும், அவசியத்தையும் கொண்டிருக்கின்றன. இத்திட்டத்தின் சமூகப் பெறுமானமும், முக்கியத்துவமும் கருதி இதற்கு ஆதரவும், பங்களிப்பும் வழங்க வேண்டியவர்களாக புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்களும், சமூக சக்திகளும் இருக்கிறார்கள்.

அறிவு வளர்ச்சி, ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தில் அக்கறை கொண்ட அனைவரும் இந்த செயற்திட்ட நடைமுறை இயக்கத்தில் பூரணமாக பங்காற்றுவது இன்றைய காலகட்டத்தில் நாம் கூட்டாக இணைந்து ஆற்றும் ஒரு மகத்தான பணியாகவும், பங்களிப்பாகவும் அமையும். இந்த வகையில் இலங்கையரும் வெளிநாடுகளிலும் வாழும் கல்வியியலாளர்கள், சமூக அறிவு, பண்பாட்டுத்துறை சார்ந்தோர், சமூக செயற்பாட்டாளர்கள் இதன் மற்றுமொரு பங்களிப்பு பகுதியினராவர். செயற்பாட்டுத் திட்ட முன்னெடுப்பாளர்களாக செயலூக்கத்துடன் முன்வந்து பொறுப்புகளை எடுத்துச் செயல்படுத்துமாறு இச்சந்தர்ப்பத்தில் அனைவரையும் வேண்டுகிறோம். இது ஒரு கூட்டுச் செயற்பாடாகும். சமூக அபிவிருத்தி, மானிட வளர்ச்சியுடன்,மக்களையும், சமூகங்களையும், பிரதேசங்களையும் ஒன்றிணைத்து நமது சமுகத் தளத்தில் ஒருபடி முன்செல்ல நமக்கான இன்னுமொரு வாய்ப்பை இத்திட்டம் கொண்டிருக்கிறது.

இம்மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் பாரியளவில் இத்திட்டம் மூன்று நாள் நிகழ்வாக வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சி, ஆய்வரங்குகள், உரைகள், கலை நிகழ்வுகள் என ‘புத்தகங்கள், வாசிப்பு, எழுத்து, பரவலாக்கம் ‘ எனும் கருத்தாக்கத்தினை இந்த நிகழ்வுகள் முன்னிறுத்தவுள்ளன.

புத்தகக் கண்காட்சியில், தமிழகத்திலுள்ள பல பதிப்பகங்களும். இலங்கை பதிப்பகங்களும் கலந்து கொள்கின்றன. ஈழத்து எழுத்தாளர்களுக்கான தனி அரங்கும் உள்ளது. இந்த அரங்கில் ஈழத்து எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் தமது நூல்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து பேச்சாளர் கதை சொல்லி பவா செல்லதுரை, எழுத்தாளர் பெருமாள் முருகன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, உலகறிந்த தமிழாய்வாளர் முனைவர் இரா. வெங்கடாசலபதி, பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் மற்றும் இலங்கையிலுள்ள கல்வியாளர்களும் கலந்துக்கொள்கின்றனர்.

ஆய்வரங்குகளில், தமிழக ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் கலைஞர்களும் பதிப்பாளர்களும் கலந்து கொள்ளும் அதேநேரம், இலங்கையின் கல்வியியலாளர்களும், எழுத்தாளர்களும் பங்குகொள்கின்றனர். நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தோரும் தம்பிரதேச நிலை பற்றியை ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.

லண்டனில் பதிவுசெய்யப்பட்ட சமூக நிறுவனமான மானுடம் அமைப்பு இத்திட்டத்தினை முன்னெடுக்கிறது. மதகு அமைப்பு இதனை ஒருங்கிணைக்கிறது. இலங்கையிலுள்ள ஏனைய அமைப்புகளும், தனிநபர்களும் இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட முடியும். இத்துறை சார்ந்து ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரையும், இந்த மூன்று நாள் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறோம். நமது தமிழ் மொழித்தளத்தில், நீண்ட காலத்தின் பின் நடைபெறவுள்ள முக்கியமாக அறிவியல், பண்பாட்டு ஒன்றுகூடுகை இதுவாகும்.

எச்.எச். விக்கிரமசிங்க

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT