Saturday, July 20, 2024
Home » சட்டவிரோத மதுபானத்தினால் தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் 34 பேர் பரிதாப மரணம்!

சட்டவிரோத மதுபானத்தினால் தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் 34 பேர் பரிதாப மரணம்!

by mahesh
June 21, 2024 2:36 pm 0 comment

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்தியதால் பாதிக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 34 பேர் நேற்றுக் காலை வரை உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பலர் உயிரிழந்து விட்டதால் அப்பகுதியெங்கும் அச்சம் நிலவுகின்றது.

இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உடற்கூறு ஆய்வை விரைவாக செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் உயிரை காப்பதற்கு திருச்சி சேலம் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து உயர் சிறப்பு மருத்துவர்கள் வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூடுதல் அம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சமும், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நான்கு கிராமங்களைச் சேர்ந்த, மது அருந்திய பலர் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்துப் போதல் போன்ற பிரச்சினைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரத் தொடங்கினர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20- இற்கும் மேற்பட்ட அம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர்தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெதனோல் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொலிஸ்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 10 பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது என்று மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சி.பி. சி. ஐ. டிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறினார்.

விஷ சாராயம் குடித்து அதிகமானோர் உயிரிழந்த கருணாபுரம் பகுதியில் பாதுகாப்பு கருதி 200 இற்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எம். எஸ். பிரசாந்த் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய அத்தியட்சகராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி,கள்ளக்குறிச்சி பொலிஸ் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், பொலிஸ் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானத்தை பலரும் அருந்தியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார்.

அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர். அவர்களே மரணமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT