Saturday, July 20, 2024
Home » தரம் 1 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் திருத்தம்

தரம் 1 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் திருத்தம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 முடிவுகள்

by Prashahini
June 20, 2024 3:42 pm 0 comment

– தேசிய அடையாள அட்டை தொடர்பில் முக்கிய தீர்மானம்
– சிறுபோகத்திற்கான நெற் கொள்வனவுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன்திட்டம்

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளை திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மையுடனும், முறைகேடுகள் குறைவான வகையிலும் கல்வி அமைச்சால் வெளியிடப்படும் சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்படுவர். அதற்கமைய, கடந்த ஆண்டுகளில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளை திருத்தம் செய்வதற்கும், குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. வங்காள விரிகுடாவை அண்டிய நாடுகளில் பல்துறைசார் தொழிநுட்ப பொருளாதார தொடக்க முயற்சிகளுக்கான கூட்டணி (BIMSTEC) உறுப்பு நாடுகளில் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தம்

வங்காள விரிகுடாவை அண்டிய நாடுகளில் பல்துறைசார் தொழிநுட்ப பொருளாதார தொடக்க முயற்சிகளுக்கான கூட்டணியால் (BIMSTEC) உறுப்பு நாடுகளுக்கிடையே கடல்வழிப் போக்குவரத்து ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல் தொடர்பான முன்மொழிவு 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனை தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய்வதற்காக அலுவலர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த அலுவலர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கடல்வழிப் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவையின் உடன்பாடு வழங்கப்பட்டுள்ளது.

3. நேரடி முதலீட்டு ஊக்குவிப்புக்களை மேற்கொள்கின்ற ஒத்துழைப்புக்களுக்கான இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்குமிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளல்

கொள்கை மற்றும் சட்ட மறுசீரமைப்புக்கள், உயர்வானதும், ஒருங்கிணைந்த வகையிலுமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கல், செயன்முறை மீள் உருவாக்கம் போன்றவற்றின் மூலம் நாட்டுக்கு நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக இருநாடுகளுக்கிடையில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக இருதரப்பு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2024.04.28 மற்றும் 29 ஆம் திகதிகளில் சவூதி அரேபிய இராச்சியத்தின் றியாத் இல் இடம்பெற்ற உலக பொருளாதார மன்றத்தின் விசேட கூட்டத்தின் போது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் கையொப்பமிட்டுள்ளமையை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள தகவல்கள் அமைச்சரவையில் கருத்தில் கொள்ளப்பட்டது.

4. வர்ஜீனியா துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையிலான ஒத்துழைப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் கொழும்புத் திட்டமும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் ‘துறைமுகங்கள், சமுத்திரவியல் நிபுணத்துவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்’ கீழ் துறைமுகங்களுக்கிடையே நிபுணத்துவ பரஸ்பர பரிமாற்ற ஒத்துழைப்புக்களுக்கான வர்ஜீனியா துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு இருதரப்புக்கும் இடையிலான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் இருதரப்பு நிறைவேற்றுப் பணிக்குழாமின் தொழிற் திறன்களை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. கொழும்பு சர்வதேச திரைப்பட விழா – 2024

இலங்கையின் சினிமா தொழிற்துறையில் எழுச்சியை உருவாக்கி உலகளாவிய சினிமாவில் எமது நாட்டைப் பிரபலப்படுத்துவதற்கும், அதிக சுற்றுலாத்துறையில் கவர்ந்திழுப்பதற்காக இலங்கையை தெற்காசியாவில் சுற்றுலா மையமாக மாற்றும் நோக்கில் (கொழும்பு சர்வதேச திரைப்பட விழா) இவ்வாண்டு யூலை மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திரைப்பட விழாவின் மூலம் ஈரான், பிரான்ஸ், இந்தியா, தென்கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்படங்களை பார்வையிடுவதற்கு இலங்கை இரசிகர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதுடன், சினிமாத்துறை மாணவர்களுக்கு உலகளாவிய சினிமாத்துறை தொடர்பான விரிவான அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்புக்களும் கிடைக்கும்.

அதற்கமைய, குறித்த திரைப்பட விழா தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் நடாத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. மலையக இளைஞர் மாநாடு

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுள் பூர்த்தியை முன்னிட்டு (NAAM 200) ஒரு நிகழ்வாக இளைஞர் மாநாட்டை நடாத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. “இளைஞர் உதயம்” எனப் பெயர்சூட்டப்பட்டுள்ள இம்மாநாடு, இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் கண்டி வளாகத்தில் 2024.06.22 அன்று நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடனான AIESEC தொண்டர் அமைப்பின் ஒத்துழைப்புடன் குறித்த மாநாடு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

அதற்கு இணையாக, தொழிற் சந்தையொன்றை நடாத்துவதற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இதுதொடர்பாக சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

7. அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணணிமயப்படுத்தப்பட்ட சீட்டிழுப்பு லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான பெறுகை

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணணிமயப்படுத்தப்பட்ட லொத்தர் சீட்டிழுப்புக்காக லக்ன வாசனாவ, அத கோட்டிபதி, சனிதா, சுப்பர் போல், ஜயோதா, கப்றுக மற்றும் சசிரி போன்ற லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்காக தேசிய போட்டித்தன்மையான விலைமனுக் கோரல் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் விதந்துரைகளுக்கமைய ஒரு வருட காலத்திற்காக லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்காக Toppan Forms (Colombo) Ltd., DPJ Holdings Pvt. Ltd. மற்றும் Grand Export Pvt. ltd. இற்கு வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையம் – V தளத்தை கருங்கற்கள் நிரப்பி தாரிடல் கருத்திட்டம்

இலங்கை துறைமுக அதிகார சபை கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையம் – V தளத்தில் கருங்கற்கள் நிரப்பி தாரிடல் பணிகளுக்குரிய திட்டத்தைத் தயாரித்துள்ளது. அதற்கமைய, இப்பணிகளுக்காக தேசிய போட்டி விலைமுறி கோரல் மூலம் பொருத்தமான நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்படும் பெறுகைக் குழு மற்றும் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 2015-2019 காலப்பகுதியில் ‘சமெட்ட செவன’ வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீண்டும் அமுலாக்கல்

2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் ‘சமெட்ட செவன’ வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டு வசதிகளுக்கான தேவையைக் கொண்டுள்ள மற்றும் வீட்டு நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்வதற்கு இயலாது போன குறைந்த வருமானங் கொண்ட சமூகங்களை இலக்கு வைத்து மாதிரிக் கிராம வேலைத்திட்டம், கடன் வேலைத்திட்டம், கிராமசக்தி கடன் உதவித்திட்டம், கடன் உதவித்திட்டம், விருசுமிதுறு, சிறுநீரக நோயாளர்களுக்கான வீடமைப்பு உதவித்திட்டம் மற்றும் வெள்ள அனர்த்த வேலைத்திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ள 387,520 வீட்டு அலகுகளில் 229,580 வீட்டு அலகுகள் கட்டுமானங்களை இடைநிறுத்தியுள்ளதுடன், அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்வேறு உதவித்திட்டங்கள் மூலமும் மற்றும் பயனாளிகளாலும் குறித்த வீட்டு அலகுகளில் ஒருபகுதி நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை வீட்டுக் கட்டுமானங்களைப் பூர்த்தி செய்யாத 45,117 வீடுகளின் கட்டுமானப் பணிகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலையீட்டில் முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாகப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தேசிய அடையாள அட்டையை அச்சிடுவதற்காக முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேற் அட்டைகளைக் கொள்வனவு செய்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு தேசிய அடையாள அட்டையை அச்சிடுவதற்குத் தேவையான 05 மில்லியன் முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேற் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழு மற்றும் அதுகுறித்து பெறுகை மேன்முறையீட்டு சபையின் விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு குறித்த பெறுகையை இரத்துச் செய்வதற்கு 2024.06.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன்,தேசிய அடையாள அட்டை விநியோகச் செயன்முறையை தங்குதடையின்றி மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில், புதிய பெறுகையை நடைமுறைப்படுத்தி பொருத்தமான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்யும் வரைக்கும், தேவையானளவு முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேற் அட்டைகளை மாத்திரம் முன்னய விநியோகத்தர்களிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்னய விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட வேண்டிய அட்டைகளின் எண்ணிக்கை தொடர்பாக விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், விநியோகத்தரால் சமர்ப்பிக்கப்படும் விலையை மதிப்பீடு செய்வதற்காக கருத்திட்டக் குழுவொன்றும், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்களின் விதந்துரைகளுக்கமைய முன்னய விநியோகத்தரான juhd Just In Time Technologies (Pvt) Ltd இடமிருந்து மீண்டும் 2.3 மில்லியன் முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேற் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2024 சிறுபோகத்திற்கான நெற் கொள்வனவுக்கான சலுகை வட்டி வீதத்தில் வங்கிகள் மூலம் கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்தல்

2023/24 பெரும்போகம் மற்றும் 2024 சிறுபோக நெற் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்கீழ் 2024 சிறுபோகத்தில் நெற் கொள்வனவுக்காக கடன்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொறிமுறை தொடர்பாக திறைசேரி பிரதிச் செயலாளர் அவர்களின் தலைமையில் ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய 2024 சிறுபோகத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் மொத்த நெல் கொள்வனவாளர்களுக்கு வங்கிகள் மூலம் 6000 மில்லியன் கடன் தொகையினை சலுகை வட்டி வீதத்தில் வழங்குவதற்காகவும், அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT