Sunday, July 14, 2024
Home » வெற்றிகரமாக நிறைவுற்ற ஹஜ் கடமை

வெற்றிகரமாக நிறைவுற்ற ஹஜ் கடமை

by sachintha
June 20, 2024 11:24 am 0 comment

இவ்வருடத்துக்கான புனித ஹஜ் கடமை முடிவுக்கு வந்தது.

சவூதி உள்துறை அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் இவ்வருடம் 1,833,164 ஹாஜிகள் தமது ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

அவர்களில் 1,611,310 பேர் சுமார் 160 நாடுகளில் இருந்து வருகை தந்த வெளிநாட்டு ஹாஜிகளாவர்.

2021, 2022 ஆகிய இரண்டு வருடங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஹஜ் கடமையை நிறைவேற்றும் சந்தர்ப்பம், பெரியளவில் கிடைக்கவில்லை. ஆனால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த வருடமும் இவ்வருடமும் சவூதியின் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் எவ்வித குறையும் பிரச்சினைகளுமின்றி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது ஹஜ்.

இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ்வருட ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகள், மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தந்த ஹாஜிகள் தமது ஹஜ் கடமையை, பாதுகாப்பாகவும் நிம்மதியான சூழலில் இலகுவாகவும் நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார ரீதியான சேவைகள் பாராட்டுக்குரியவை.

சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை மொத்தம் 183 சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் 32 மருத்துவமனைகள், 151 சுகாதார நிலையங்கள் மற்றும் 6 நடமாடும் கிளினிக்குகளும் அடங்குகின்றன. அதற்காக சுமார் 32 ஆயிரம் மருத்துவ மற்றும் நிர்வாக ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுள் பல்வேறு துறைகளையும் சேர்ந்த ஐயாயிரம் மருத்துவர்கள் (consultant physician) ஹஜ் நடைபெறும் நாட்கள் முழுவதும் எந்த அவசர நிலைமைக்கும் உடனடியாக பதிலளிக்கும் வகையில் 24 மணிநேர சேவையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அதேநேரம் ஹாஜிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்புக் கருதி உயர் தரத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சேவையாக போக்குவரத்து சேவைகள் விளங்குகின்றன. உலகெங்கிலும் இருந்து வருகை தரும் ஹாஜிகளை வரவேற்பதற்காக அதின நவீன வசதிகளுடன் கூடிய 6 விமான நிலையங்கள் தயார்படுத்தப்பட்டன.

மினா, முஸ்தலிபா, அரபா ஆகிய புனிதத் தலங்களுக்கு ஹாஜிகள் இலகுவாக சென்று வர சுமார் 2000 அதிவேக ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. மட்டுமல்லாது இரண்டாயிரம் அம்பியுலன்ஸ்கள், 27 ஆயிரம் பஸ் வண்டிகள், ஐயாயிரம் டெக்ஸிகள் என்பன சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

அல் மஸ்ஜிதுல் ஹராம், அல் மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு புனிதத் தலங்களிலும் சுமார் 14000 ஆயிரம் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

அவர்களுடன் ஆயிரக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர், சாரண இயக்கத்தினர், தொண்டர்கள் என பெருமளவிலானோர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஹாஜிகளுக்கான ஹஜ், உம்ரா வழிகாட்டல்களும், அவர்களது கேள்விகளுக்கான பதில்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்கப்பட்டன.

அத்துடன் மக்கா ஹரம் ஷரீபில் ஹாஜிகளுக்கான அறிவுரைகள், வழிகாட்டல்களை வழங்க ரோபோ இயந்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அரபு, ஆங்கிலம், துருக்கி, உருது, பிரெஞ்ச் உட்பட 11 மொழிகளில் குறித்த ரோபோ இயந்திரம் சேவைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வயோதிபர்களினதும் மாற்றுத் திறனாளிகளினதும் பாவனைக்காக சுமார் பத்தாயிரம் மின்சார வண்டிகள் பாவனைக்கு விடப்பட்டன.

சுமார் 14 க்கும் அதிகமான ஸ்மார்ட் செயலிகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

அல் குர்ஆன், தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை அடையாளப்படுத்தல், மின்சார வண்டிகளை முன்கூட்டியே பதிவு செய்தல் போன்ற சேவைகளை இதன் மூலமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இவ்வளவு பாரிய ஏற்பாடுகளுடன் தான் இவ்வருட ஹஜ் கடமை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த உயரிய ஏற்பாடுகளுக்காக பலரும் சவூதியைப் பாராட்டிவருகின்றனர்.

அண்மையில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரியொருவரும் சவூதி அரேபியாவின் மகத்தான ஏற்பாடுகளுக்காக நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அபூ அரீஜ் அர்ரியாழி –

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT